புலிப்பால் கேட்ட அரசிக்கு புலிக்கூட்டத்துடன் கம்பீரமாய் வந்து அசத்திய ஐயப்பன்

கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து என்று பக்தர்கள் ஐயப்பனின் பாடலைப் பாடும்போது நம்மை அறியாமலேயே அந்தப் பக்தி பரவசத்தில் நமக்கு மெய்சிலிர்க்கும். இப்போது ஐயப்பனின் கதையைப் பார்க்கலாமா…

மகிஷாசூரனின் தங்கை மகிஷி தன் அண்ணனின் சாவுக்கு தேவர்களே காரணம் எனக் கருதி அவர்களைப் பழி வாங்க முடிவு செய்தார்கள். அதற்கான சக்தியைப் பெற மகிஷி பிரம்மாவை நோக்கித் தவம் புரிந்தாள்.

பிரம்மா இவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்றார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த மகனைத் தவிர வேறு யாராலும் எனக்கு மரணம் வரக்கூடாது என்று வரம் கேட்டாள் மகிஷி.

கேட்ட வரம் கிடைத்தது. மகிஷி தேவர்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். பூலோகத்தில் மக்களையும் கொடுமைப்படுத்தினார். தேவலோகத்தையும், பூலோகத்தையும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்தார்.

தேவர்கள் துயரம் தாங்காமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார்.

Ayyappa pakthargal
Ayyappa pakthargal

பம்பா தீர்த்தத்தில் ஒரு குழந்தையாக ஐயப்பன் அழுது கொண்டு இருந்தார். அப்போது பாண்டிய மன்னனும், பந்தள தேச அரசனுமான ராஜசேகரன் குழந்தையில்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி ஐயப்பனை அழைத்துக் கொண்டார்.

அந்தக்குழந்தையைப் பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் சூட்டினார்கள்.

இந்தநிலையில் மகாராணிக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும் குழந்தை பிறந்தது என்று அரசனும், அரசியும் ஆனந்தம் அடைந்தனர்.

உங்களுக்குப் பிறந்த மகன் இருக்க ஐயப்பனை ஏன் தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அடுத்த மன்னனாகவே ஐயப்பன் வர வாய்ப்பிருக்கிறது என்று அரசியின் மனதில் சிலர் நஞ்சை விதைத்தனர். அரசியும் மனம் மாறினார்.

தான் வயிற்றுவலியால் அவதிப்படுவதைப் போல நடித்தார். தான் புலிப்பால் குடித்தால் மட்டுமே குணமாக முடியும் என்று அரசவை வைத்தியரை சொல்ல வைத்தார். தாய்க்குப் புலிப்பால் கொண்டு வர காடு நோக்கிப் புறப்பட்டான் ஐயப்பன். வழியில் மகிஷி தடுத்தாள். வில்லெடுத்த வில்லாதி வீரனான ஐயப்பன் மகிஷியை வதம் செய்தான். அவனது அவதாரம் பூர்த்தியானது.

Ayyappan Koil
Ayyappan Koil

மகிஷி மீண்டும் சாபவிமோசனம் பெற்று ஐயப்பனை அடையும் ஆவலை தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சரிய நிஷ்டை உள்ளவனாக இருப்பதால் அது சாத்தியமாகாது என்றும் தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்து அம்மா என்ற பெயருடன் விளங்குவாயாக என்று அருள் கொடுத்தார்.

மகிஷியின் கொடுமை நீங்கியதால் தேவர்கள் புலியாகி ஐயப்பனின் பணிகளை நிறைவேற்ற அவருடன் சென்றனர். புலிக்கூட்டம் வருவதைப் பார்த்த ராணி பயந்து நடுங்கினாள். ஐயப்பனின் சக்தியையும், மகிமையையும் கண்டு ராணி மன்னிப்பு கேட்டாள்.

ஐயப்பனும் மன்னிப்பதற்கு எதுவும் இல்லை. எல்லாம் லீலைகளின்படி நடந்துள்ளன. நான் பூமிக்கு வந்ததற்கான அவதாரம் முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றார். மன்னனும் தங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்.

எங்கு கட்டுவது என்று சொல்லுங்கள் என்றார். ஐயப்பன் அம்பு எய்தி இது எங்கு போய் விழுகிறதோ அங்கு போய் 18 படியுடன் கோவில் கட்டுங்கள் என்றார். அது சபரிமலையில் போய் விழுந்தது.

Ayyappan1
Ayyappan1

அதன் இடது பக்கத்தில் மாளிகை புரத்து அம்மனுக்கும் கோவில் கட்டுமாறு சொல்லிவிட்டு தேவலோகம் சென்றார். அரசனும் அவர் சொன்னபடியே கோவிலைக் கட்டினார். ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் மாலை போட்டு விரதமிருந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.