நடிகர்களின் மிகப்பெரிய பக்கபலமே அவர்களின் பாசத்திற்குரிய ரசிகர்கள் தான். ரசிகர்கள் நினைத்தால் ஒரு நடிகரை உச்சத்திற்கு கொண்டு செல்லவும் முடியும். அதே நடிகரை தூக்கி எறியவும் முடியும். அதேபோல் ரசிகர்களுக்கு ஒரு நடிகரை பிடித்து விட்டால் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
அந்த வகையில் கோலிவுட்டில் அனைத்து நடிகர்களுக்கும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர். ஆனால் நடிகர் அஜித்திற்கு சற்று ரசிகர் பட்டாளம் அதிகம். அஜித்தின் எளிமை ரசிகர்களிடம் பாசமாக பழகும் விதம் என பல நல்ல குணங்களால் ஏராளமான நபர்களுக்கு அஜித்தை பிடிக்கும்.
ஆனால் நடிகர் அஜித்திற்கோ ரசிகர் மன்றம், பாலாபிஷேகம் செய்வது, பச்சைக்குத்தி கொள்வது, அடைமொழி வைத்து அழைப்பது போன்று எதுவுமே பிடிக்காது. சமீபத்தில் கூட இனி என்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.
அதேபோல் அஜித்திற்கு போஸ்டர் பேனர் போன்ற கலாச்சாரமும் பிடிக்காது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் மதுரை முழுக்க புதுவிதமான போஸ்டர் ஒன்றை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். அந்த போஸ்டரில் “வருடங்கள் கடந்தாலும் வலிமையும் வரலாறும் அழியாது” என்ற வாசகத்தோடு அடங்காத அஜித் குரூப்ஸ் என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதைவிட சுவாரஸ்யம் என்னவென்றால் அந்த போஸ்டரில் நடிகர் அஜித்தின் உருவத்தை சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் போல சித்தரித்துள்ளனர். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் தனக்கு பிடிக்காது என அஜித் பலமுறை கூறியும் அவரின் ரசிகர்கள் கேட்பதாக தெரியவில்லை. மீண்டும் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.