வெள்ளை மாளிகைக்குள் திடீரென ஊடுருவிய ஒன்றரை வயது குழந்தை.. பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி..!

அமெரிக்க அதிபர் வாழும் வெள்ளை மாளிகைக்குள் ஒன்றரை வயது குழந்தை ஊடுருவி உள்ளே சென்ற விவகாரம் பாதுகாப்பு அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உலகிலேயே அதிக பாதுகாப்பு உள்ள கட்டிடங்களில் ஒன்று வெள்ளை மாளிகை என்பதும் அமெரிக்க அதிபர் வாழும் இந்த கட்டிடத்திற்கு பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டிடத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளை மீறி யாரும் செல்ல முடியாது என்பதும் அந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் வடக்கு கேட்டில் ஒன்றரை வயது குழந்தை கேட்டை தாண்டி உள்ளே சென்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வெள்ளை மாளிகையின் பின்புறம் உள்ள வீட்டில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த இந்த குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அப்போது வெள்ளை மாளிகையின் கேட் அருகே வந்த அந்த குழந்தை ஐந்தரை அங்குலமே இருந்த கேட்டின் இடைவெளியில் உள்ளே சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை தற்செயலாக பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் ஒன்றரை வயது குழந்தை எப்படி வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தது என்று ஆச்சரியமடைந்து விசாரணை செய்தனர். அதன் பின்னர் தான் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை உள்ளே வந்து விட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த குழந்தையின் பெற்றோரிடம் அந்த குழந்தையை ஒப்படைத்து அவர்களிடம் விசாரணை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வெள்ளை மாளிகைக்குள் சிலர் ஊடுருவ முயன்றதை அடுத்து தற்போது உயர் ரக பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் அது மட்டும் இன்றி வெள்ளை மாளிகையை அனைத்து கேட்டுக்களிலும் உயரம் அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒன்றரை வயது குழந்தை வெள்ளை மாளிகை கேட்டில் உள்ள இடைவெளி பயன்படுத்தி உள்ளே புகுந்துவிடும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என்றும் இந்த நிகழ்வை அடுத்து மேலும் சில பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.