ஹேமா டூ லதா மங்கேஷ் வரை… இசை ராணியின் வாழ்க்கை பயணம்!

தனது மெல்லிய குரலால் இசையுலகை ஆண்ட ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ லதா மங்கேஷ்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி இந்தியாவையே பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

1929ம் ஆண்டு செப்டம்பர் 28ந் தேதி இந்தூரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். மராத்தி மற்றும் கொங்கனி இசைக்கலைஞரான தீனாநாத்தின் மகள் தான் லதா மங்கேஷ்கர். முதலில் மகளுக்கு ஹேமா என பெயர் சூட்டிய தீனாநாத், சில நாட்களுக்குப் பிறகு தான் நடித்த நாடகங்களில் ஒன்றான பாவ்பந்தனில் வரும் லதிகா என்ற கதாபாத்திரத்தின் நினைவாக லதா என பெயரை மாற்றினார்.

ஐந்து வயதாக இருக்கும் போது தனது தந்தையின் இசைக்குழுவில் சேர்ந்து நடிக்க துவங்கினார் லதா. 1943 ம் ஆண்டு லதாவிற்கு 13 வயதான போது அவரின் தந்தை இதய நோயால் உயிரிழந்தார். அப்போது அவர்கள் குடும்பத்திற்கு உதவுவதற்காக மாஸ்டர் விநாயக் என்பவர் லதா மங்கேஷ்கருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்று வந்தார்.

மராத்தி மொழியில் லதா மங்கேஷ்கர் முதல் முதலில் தனது சினிமா பாடலை பாடினார். ஆனால் அந்த பாடல் படத்தில் இடம்பெறவில்லை. பிறகு 1943 ல் மராத்தி படமான Gajaabhaau படத்திற்காக மாதா ஏக் சபூத் என்ற இந்தி பாடல் தான் லதா மங்கேஷ்கர் பாடி வெளிவந்த முதல் பாடல். முதல் பாடல் வெளியானதும் மும்பையில் செட்டிலான லதா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த மொழிகளில் பாட ஆரம்பித்தார்.

36க்கும் அதிகமான இந்திய மொழிகளிலும், சில வெளிநாட்டு மொழிகளிலும் கூட லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார். இந்தி மற்றும் மராத்தியில் அதிக பாடல்கள் பாடியுள்ள லதா மங்கேஷ்கர், தனது வாழ்நாளில் 30,000 க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். அதில் சுமார் 25,000 பாடல்கள் லதா மங்கேஷ்கர் மட்டுமே பாடிய சோலோ பாடல்கள்.

பின்னணி பாடகி, தயாரிப்பாளர் போன்ற பல முகங்களைக் கொண்ட லதா மங்கேஷ்கர். மராத்தி மற்றும் இந்தி மொழிகளில் 5 படங்களுக்கு லதா மங்கேஷ்கர் இசையமைத்துள்ளார். Sadhi Manase படத்திற்காக மகாராஷ்டிர மாநில அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதினை 1965ம் ஆண்டு கிடைத்துள்ளது. இவர் இசையமைத்த Airanichya deva tula என்ற பாடல் சிறந்த பாடலுக்கான விருதினையும் பெற்றுள்ளது. 1960 முதல் 1969 வரை இவர் படங்களில் இசையமைப்பாளராக வலம் வந்துள்ளார்.

952ம் ஆண்டு இந்தியில் வெளியான ஆண் என்ற படம், தமிழில் ஆண் முரட்டு அடியாள் என்ற டப் செய்யப்பட்டது. அதில் இழந்தேன் உன்னை அன்பே” “நகரு நகரு” “பாடு சிங்கார பாடலை” “இன்று எந்தன் நெஞ்சில்” ஆகிய பாடல்களை தமிழில் லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார். 1955ம் ஆண்டு இந்தியில் திலீப்குமாரின் நடிப்பில் உரன் கடோலா என்ற படம் தமிழில் வான ரதம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டது.‘எந்தன் கண்ணாளன்’ என்ற பாடலை தமிழில் பாடினார். இந்த பாடல் அப்போதைய தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் பாடலாக ஆனது. இந்தியில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்த லதா மங்கேஷ்கரை தமிழில் நேரடியாக பாட வைத்த பெருமை இசை ஞானி இளையராஜாவையே சாரும். 1987ம் ஆண்டு வெளியான “ஆனந்த்” என்ற படத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு “ஆராரோ ஆராரோ” என்ற தமிழ் பாடலை முதன் முறையாக லதா மங்கேஷ்கர் பாடினார்.

1988ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணாவின் அறிமுக இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் லதா மங்கேஷ்கர் இணைந்து பாடிய “வளையோசை கலகலவென” பாடல் காலத்தால் அழிக்க முடியாத வகையில் இன்றளவும் ஒலித்து வருகிறது. கார்த்திக் நடிப்பில் வெளியான “என் ஜீவன் பாடுது” என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் உருவாகிய “எங்கிருந்தோ அழைக்கும்” என்ற பாடலை பாடகர் மனோவுடன் இணைந்து டூயட்டாகவும், சோலாவாகவும் லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார். இதுவே லதா மங்கேஷ்கர் தமிழில் பாடிய கடைசி பாடல் ஆகும். தமிழ் இசையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் இந்தியில் இசையமைத்திருந்த “ரங் தே பசந்தி” என்ற படத்தில் “லூகா சூப்பி” என்ற பாடலை ரஹ்மானுடன் இணைந்து பாடியுள்ளார்.

லதா மங்கேஷ்கர் 4 படங்களை தயாரித்துள்ளார். vaadal, jhaanjhar, kanchan ganga, lekin ஆகிய படங்களை இவர் தயாரித்துள்ளார். இதில் Vaadal தவிர மற்ற மூன்றும் இந்தி படங்கள் ஆகும். பலருக்கும் விருதுகள் பெருமையாக அமையும், சிலருக்கு மட்டுமே வழங்கப்படுவதால் தான் அந்த விருதுக்கே பெருமை கிடைக்கும். அப்படி விருதுகளின் ராணியாக வலம் வந்தவர் லதா மங்கேஷ்கர், இந்தியாவின் நைட்டிங் கேள் என அழைக்கப்பட்ட லதா மங்கேஷ்கர், பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகிப் பால்கே,பாரத ரத்னா என நாட்டின் உயரிய விருதுகள் பலவற்றையும் பெற்று, அந்த விருதுக்கு பெருமை சேர்ந்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஜனவரி 11ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பல நாட்களாக ஐசியுவில் இருந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேறி வந்த நிலையில் இன்று மீண்டும் மோசமடைந்தது. இதையடுத்து, அவருக்கு மீண்டும் வென்டிலேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். மயக்கும் மந்திரக்குரலால் ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்கவைத்த ‘இந்தியாவின் இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் இன்று நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்ற செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 92 வயதான லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், விளையாட்டு வீரர்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment