இந்தியாவின் இரண்டாம் தலைமுறை வழிகாட்டி செயற்கைக்கோள் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க..
இந்தியாவில் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் வழிகாட்டி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக கடற்பரப்பு, வான்பரப்பு என தனித்தனியே நேவிகேஷன் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முந்தைய வழிகாட்டி செயற்கைக்கோளின் ஆயுட்கால முடிவடைய உள்ளதால் தற்போது என்.வி.எஸ் 01 எனப்படும் இரண்டாம் தலைமுறை நேவிகேஷன் செயற்கைக்கோள் திங்கட்கிழமை காலை 10:42 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி எஃப்12 ரக ராக்கேட் மூலம் அது விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட 6வது ஜி.எஸ்.எல்.வி எப் -12 ராக்கெட் இதுவாகும்.
அதன் மூலம் ஏவப்படும் என்.வி.எஸ் 01 செயற்கைக்கோளை 36,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவிநிலை சுற்றுப்பாதையில் 3 மணி நேரத்தில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளில் இரண்டு சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதால் அதன் மூலம் 2.4 கிலோ வாட் மின் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோளை பயன்படுத்தி கடல்சார் இருப்பிடம், விவசாய நிலங்களை கண்டறிதல், பேரிடர் மேலாண்மை, அலைபேசிகளுக்கான நேவிகேஷன் வசதி உள்ளிட்டவற்றை பெற முடியும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்பு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களுக்கு 10 ஆண்டுகள் ஆயுட்காலம் இருந்த நிலையில் இந்த NVS 01 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே சொந்த நேவிகேஷன் அமைப்புகளை கொண்ட நாடுகளாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த செயற்கைக்கோள் மூலம் இந்தியாவும் அந்த பட்டியலில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.