அண்ணனுக்கு பக்கத்திலேயே தம்பி வீற்றிருக்கும் குன்றக்குடி முருகன் கோவில்

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிகம் இருக்கும் ஒரு பகுதி காரைக்குடியும் அதன் சுற்றுப்புற பகுதிகளும். காரைக்குடி அருகில் மிக முக்கியமான கோவிலாக இருப்பது பிள்ளையார்பட்டி. பெயரிலேயே பிள்ளையார் பெயர் கொண்டு விளங்குவதால் இந்த கோவிலுக்கு அகில உலகம் எங்கிலும் இருந்து விநாயகர் பக்தர்கள் வருகிறார்கள்.

இந்திய அளவில் மிக புகழ்பெற்ற விநாயகராக இங்குள்ள கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார்.

இதன் அருகிலேயே அதாவது பிள்ளையார்பட்டியில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள ஒரு ஊர்தான் குன்றக்குடி. குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப ஒரு சிறிய குன்றில் இங்கு முருகன் வீற்றிருக்கிறார். அண்ணன் பிள்ளையாரும் தம்பி முருகனும் அருகருகே வீற்றிருக்கும் புகழ்பெற்ற இரண்டு கோவில்கள் தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான் இருக்கிறது.

இந்த பகுதியில் பேச்சு வழக்கில் குன்னக்குடி என்று சொன்னால்தான் பலருக்கு தெரியும். குன்றக்குடி முருகன் கோவில் புகழ் பெற்றது. தென்மாவட்ட பகுதிகளில் பழனிக்கு பாதயாத்திரை செல்வதை இப்பகுதி நகரத்தார்கள் தான் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தனர். குன்றக்குடி முருகன் கோவிலில் இருந்துதான் பல வருடங்களாக காவடி எடுத்துக்கொண்டு பழனிக்கு பாதயாத்திரை செல்வதை இப்பகுதி மக்கள் இன்று கடைபிடித்து வருகிறார்கள்.

அன்னமும் கருடனும் நாங்கள்தான் மயிலை விட வேகமாக பறக்க கூடியவர்கள் என்று சொன்னதால் கோபமடைந்த மயில் ஒன்று இருவரையும் விழுங்கியது. இதனால் இந்திரன் முருகனிடம் முறையிட மயிலை மலையாக போக முருகன் சாபமிட்டாராம். இதனால் மயில் முருகனை நினைத்து அரச வனம் என்ற இந்த இடத்தில் தவம் இருந்ததாம். மயிலின் தவத்தை போற்றி முருகன் இங்குள்ள மலையிலேயே எழுந்தருளி மயிலுக்கு சாப விமோசனம் தந்தார் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே இங்குள்ள சண்முகநாதர் என அழைக்கப்படும் முருகன் எழுந்தருளி வீற்றிருக்கிறார்.

பல வேண்டுதல்களை வைத்திருப்போர் குன்றக்குடிக்கு காவடி எடுத்து வருகிறேன் என வேண்டிக்கொண்டு நேர்த்தி செலுத்துவர். அந்த வகையில் தமிழ்நாட்டிலேயே காவடிக்கு பெயர் பெற்ற ஊர் இந்த குன்னக்குடி.

இந்த பகுதிக்கு ஒருமுறை சென்றால் அவசியம் ஒருமுறை குன்றக்குடி முருகன் கோவிலுக்கு சென்று முருகனின் அருள் பெற்று வாருங்கள்.

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print