முதல்முறையாக பள்ளிக்கு செல்லும் மழலைகள்!! இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்..
பள்ளிக்கூட வாசனைகளே தெரியாமல் இரண்டு வருடங்களாக வீட்டிலேயே முடங்கி ஆன்லைன் வழியாகவே மட்டும் கல்வி கற்று வந்த மழலைகள் முதன் முதலாக நேரடி வகுப்புகளுக்கு செல்கிறார்கள்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. இரண்டு ஆண்டுகளில் அடுத்தடுத்து மூன்று அலைகளாக கொரோனா பரவியதால் பள்ளிகள் கல்லூரிகள் திறக்க பட்டாலும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
பள்ளிகளில் காலெடுத்து கூட வைக்காத மழலைகள் இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் பாடம் படித்து வந்தனர். இந்நிலையில் தற்போது தொற்று பரவல் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்புவதால் மழலையர் பள்ளிகளை திறக்க முதலவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்கப்படுகிறது. மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளில் 5 வயதிற்குள் மட்டுமே படிப்பதால் கொரோனா தொற்று காய்ச்சல் ஏற்படாத வகையில் சிறப்பு கவனம் செலுத்த பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதன் முதலாக பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் வகுப்புகளை நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளை முதல் முதலாக பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
