மொபைல் போன் வெடித்து பலியான கேரள சிறுமி: சியாமி நிறுவனம் விளக்கம்..!

கேரளாவில் 8 வயது சிறுமி ஒருவர் ஸ்மார்ட்போனில் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தபோது மொபைல் வெடித்து சிதறியதால் உயிர்  இழந்தார். கேரளாவின் திருச்சூரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஆதித்யஸ்ரீ என்ற சிறுமி 3-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவர் இரவு 10:30 மணியளவில் ஸ்மார்ட்போனில் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மொபைல் போன் வெடித்தது.  சிறுமியின் பாட்டி மற்றொரு அறையில் அமர்ந்திருந்தபோது, வெடிக்கும் சத்தம் கேட்டு விரைந்து சென்று பார்த்தபோது சிறுமியின் முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

முதல்கட்ட விசாரணையில் ஸ்மார்ட்போன் அதிக அளவில் பயன்படுத்தியதால் வெடித்திருக்கலாம் என்றும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த போனை ஆதித்யஸ்ரீயின் மாமா வாங்கியதாகவும், அதே கடையில் சில நாட்களுக்கு முன்பு பேட்டரி மாற்றியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து சியாமி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் ’இந்தியாவில், வாடிக்கையாளர் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது, மேலும் இதுபோன்ற விஷயங்களை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் சிறுமியின்  குடும்பத்துடன் ஆதரவாக இருக்க விரும்புகிறோம். அவர்களுக்கு எந்த வகையிலும் ஆதரவளிப்போம். இது ரெட்மி ஃபோன் என்று சில தகவல்கள் உள்ளன, இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் உண்மையான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவோம், மேலும் அவர்களுக்குத் தேவையான எந்த வகையிலும் ஆதரவளிப்போம்.

ஒருவேளை வெடித்தது சியாமி போன் என்பது உண்மையாக இருந்தால், ஒரு வருடத்திற்குள் இது போன்ற இரண்டாவது சம்பவமாக இருக்கும். ஸ்மார்ட்போன் வெடிக்க அல்லது தீப்பிடிக்க முக்கிய காரணம் அதிக வெப்பம் தான். ஸ்மார்ட்போன்கள் அதிக வெப்பமடைய பல காரணங்கள் உள்ளன. அதிக நேரம் கேமிங் விளையாடுவது அதில் ஒன்று. அதிக நேரம் போன் பயன்படுத்தினால் வெடிக்க வாய்ப்பு உள்ளது.

ஒரே இரவில் சார்ஜ் செய்வது அல்லது சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவது அதிக வெப்பத்திற்கு வழிவகுக்கும். மேலும் முன்பு குறிப்பிட்டபடி, ஸ்மார்ட்போன் வெடித்து தீப்பிடிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அதிக வெப்பம். ஓவர்நைட் சோகம் நீண்ட காலத்திற்கு பேட்டரியை சேதப்படுத்தும், இது ஷார்ட்-சர்க்யூட் காரணமாக வெடிப்பை ஏற்படுத்தும் என்று மொபைல் போன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.