மலேசியாவில் விருது பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து…

தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியர் மற்றும் கவிஞர் என்றால் அது கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தான். சிறந்த படலாசிரியர்க்காக ஆறு முறை ‘தேசிய விருது’, ‘கலைமாமணி விருது’, ‘பத்மஸ்ரீ விருது’ ஆகியவற்றை பெற்றவர். அதுமட்டுமில்லாமல் ‘கவியரசு’, ‘கவிப்பேரரசு’, ‘காப்பியப்பேரறிஞர்’, ‘காப்பியசாம்ராட்’ போன்ற பட்டங்களை கொண்டவர்.

தமிழ் மொழியின் மீது அளவற்ற பற்று கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல்கள் எழுதுவது மட்டுமல்லாமல் பல்வேறு நாவல்கள், கவிதை தொகுப்புகள், நூல்கள் ஆகியவற்றையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நாவல்களில் ‘கருவாச்சி காவியம்’ மிகப் பிரபலமானது. 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் பணியாற்றி கொண்டிருக்கிற கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் 7500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ என்ற நூல் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடத்தப்பட்ட நூல் வெளியிட்டு விழாவில் தமிழகத்தின் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இந்நூலை வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக்கொண்டார். இந்த நூல் வெளியிட்டு விழாவில் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

‘மகா கவிதை’ என்ற இந்த நூலில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பஞ்சபூதங்கள், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் கவிதைகளை படைத்திருந்தார். இந்த நூல் இந்தியா மற்றும் இதர வெளிநாட்டு பகுதியிலும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் மலேசிய தமிழ் காப்பகமும், தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலுக்காக ‘பெருந்தமிழ் விருது’ மற்றும் 1 லட்சம் மலேசிய ரிங்கிட் ( இந்திய மதிப்பில் 18 லட்சம் ரூபாய்) அறிவித்திருந்தது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து இவ்விருதினை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு வழங்கி கவுரவித்துள்ளது . இந்த விழாவானது டான்ஸ்ரீ டாக்டர் எஸ். ஏ. விக்னேஷ்வரன் அவர்கள் தலைமையிலும் , டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையிலும் நடைபெற்றது. நிபுணர்கள் வாழ்த்துரை ஆற்றினர்.

விருதினை பெற்றுக்கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகத்துக்கும், தமிழ் பேராயத்துக்கும் என்னை வாழ்த்தி பேசிய நிபுணர்களுக்கும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...