News
கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் காலி: மொத்த வீடியோக்களும் நீக்கம்

இந்து மதத்திற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வந்த கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு வீடியோவை வெளியிட்டது
இதனை அடுத்து பொங்கி எழுந்த முருக பக்தர்கள் மற்றும் இந்து மத ஆதரவாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகள் செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று இந்த யூட்யூப் சேனலின் மேலும் இரண்டு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களும் இந்து மதத்துக்கும் இந்து மத கடவுளுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து சென்னை சைபர் கிரைம் போலீசார் கருப்பர் கூட்டம் அலுவலகம் சென்று சோதனையிட்டனர்
அதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள யூடியூப் சேனல் தலைமையகத்திற்கு இந்த யூடியூப் சேனலை தடை செய்யும்படி புகார் அளித்துள்ளார்கள்.
இந்த நிலையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் உள்ள மொத்த வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளதாக சென்னை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த யூடியூப் சேனலில் சுமார் 500 வீடியோக்கள் இருந்ததாகவும் அந்த 500 வீடியோக்களும் நீக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் இந்துமத ஆதரவாளர்கள் மற்றும் முருக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
