#Breaking முந்துபவர்களுக்கு முன்னுரிமை – திருவண்ணாமலை ஆட்சியர் அதிரடி உத்தரவு!

தீபத் திருவிழாவான டிசம்பர் 6ஆம் தேதி மகா தீபத்தை தரிசனம் செய்ய 2500 பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் வரும் 6ம் தேதி கார்த்திகை தீபா திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கோயில் வளாகம் மற்றும் கிரிவல பாதையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சைலேந்திர பாபு, பார் கோட் உடன் கூடிய அனுமதி பாஸ் பக்தர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதனிடையே திருவண்ணாமலையில் மலையேற உள்ள பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டிசம்பர் ஆறாம் தேதி காலை 6 மணிக்கு செங்கம் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் சிறப்பு மையம் ஏற்படுத்தி புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் வரும் 2500 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் பாஸ் வழங்கப்படும் என்றும், மலையேற வரும் பக்தர்கள் ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் நகலை சமர்ப்பித்து மலையேற அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பே. கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலையேற அனுமதி மற்ற வழிகளில் மலையேற அனுமதி இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. டிசம்பர் ஆறாம் தேதி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.

மலையேறும் ஆன்மீக பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்றும் மேலே கொண்டு செல்லும் தண்ணீர் காலி பாட்டில்கள் மீண்டும் கீழே கொண்டு வர வேண்டும் எனவும்அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

மலையேறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்க கூடிய எந்த பொருளையும் மலை மீது கொண்டு செல்லக்கூடாது என்றும் இந்த நடைமுறைகளை பயன்படுத்தி ஆன்மீக பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் முருகேஷ் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.