கற்பக விருட்சம் தோன்றிய கதை


84329a64536819c7ce2d56dc1634dc5f

நந்தூரம் என்னும் ஊரில் விப்ரதன் என்னும் ஒருவன் வசித்து வந்தான். கொலைத்தொழில் புரியும் வேடன் அவன். மனசாட்சி இன்றி நடந்துக்கொள்பவன் அவன். அவனைக்கண்டால், மிருகங்கள்கூட பயந்து ஓடும். கூடவே கொள்ளைத்தொழிலும் செய்வான். ஒருநாள் அந்தபக்கமா ஒரு முனிவர் போய்க்கிட்டு இருந்தார். அவர் தன்னை மறந்தவாறு கணபதி நாமத்தினை உச்சரித்தபடியே சென்றுக்கொண்டிருந்தார். முனிவரை கண்டதும் அவரிடம் கொள்ளையடிக்கலாம் என எண்ணியவாறு அவர்முன் கத்தியுடன் போய் விப்ரதன் நின்றான். இவனை கண்டு முனிவர் அதிர்ச்சயடையாமல் அமைதியாய் நின்றார். முனிவரின் போக்கு விப்ரதனை ஆச்சர்யப்படுத்தியது. தன்னைக்கண்டு மிருகங்களே பயப்படும், கத்தியுடன் நின்றும் இந்த மனிதர் தன்னைக்கண்டு பயப்படாததை கண்டு மலைத்து கத்தியை கீழே தவறவிட்டு நின்றான். அவன் மனதிலிருந்த குரூரம் மறைந்தது. அதை உணர்ந்த விப்ரதம் முனிவரை வணங்கி! கருணாமூர்த்தியே! தங்களை கண்டதும் என் மனதிலிருந்த தீய குணமெல்லாம் விலகி , அன்பு ஊற்று உருவாகி, புது மனிதனாய் அவதாரமெடுத்துள்ளேன். இனி நல்வழியில் நடக்க எனக்கு ஆசி புரியுங்கள் என வணங்கி நின்றார்.

746b44ac66b356560a24de7fcaae5827

விப்ரதன் தலையில் கை வைத்து,
‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், க்லீம், க்லௌம், கம், கணபதயே நமஹ!’ என முனிவர் வாழ்த்தினார். தன் கையில் வைத்திருந்த ஊன்றுக்கோலை அவனிடம் தந்து, இதை நீரூற்றி, நான் சொன்ன மந்திரத்தை ஜெபித்து வளர்த்து வா! அது துளிர்க்கும்வரை முயற்சியை கைவிடாதே! உனக்கு தெய்வீக சக்திகள் கிட்டும் என சொல்லி தனது பயணத்தை தொடர்ந்தார். ஊன்றுக்கோலை நட சிறந்த இடம் தேடி அலைந்தபோது, ஒரு கணபதி கோயிலும், அருகில் இருந்த தெய்வீகப் பொய்கையும் விப்ரதனைப் பெரிதும் கவர்ந்தன. அதனால், அவன் அங்கேயே தங்கி உணவின்றி உபவாசமாக இருந்து, தடாகத்தில் நீராடி, முனிவர் சொன்னபடி ஜபத்தில் ஈடுபட்டான் விப்ரதன். காலங்கள் ஓடின. அன்ன ஆகாரம் இன்றி, அவன் செய்த தவத்துக்குப் பலன் கிடைத்தது. காய்ந்த அந்த மரக்கிளை, துளிர்க்கத் துவங்கியது.

தன்னையே அனுமனாக பாவித்துக்கொண்டு, தீவிரமாக ராமஜபம் செய்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸருக்கு வால் முளைத்ததாக ஸ்ரீராமகிருஷ்ண வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேப்போல், நம்பிக்கையுடன் கணபதி மந்திரத்தை இடையறாது உச்சரித்த விப்ரதனுக்கு, கணபதியைப் போலவே தும்பிக்கை வளர்ந்தது. அவன்முன் தோன்றிய விநாயகர், ”விப்ரதா! பக்தியுடன் எனது மந்திரத்தை ஆழ்ந்து ஜபித்ததால், நீயும் என்போன்ற உருவத்தைப் பெற்றுவிட்டாய். புருவங்களுக்கு மத்தியில் தும்பிக்கையைப் பெற்றிருப்பதால், நீ ‘புருசுண்டி’ என அழைக் கப்படுவாய். உனது மந்திர பலத்தால் துளிர் விட்ட இந்த மரம், கற்பக விருட்சமாகிவிட்டது. எந்தச் செல்வத்தைக் கேட்டாலும், அதைத் தரும் வல்லமை இதற்கு உண்டு. வேறு என்ன வரம் வேண்டும், கேள்!” என அருளினார். இதில் சிலிர்த்தவன், ”தங்களின் தரிசனமே கிடைத்து விட்டது. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும், சுவாமி! தங்களின் திருவடியைச் சரணடைந்து தொண்டாற்றுகிற பாக்கியம் கிடைத்தால் போதும்!” என்றான்.

4a1c8e9dc5fd3c2f4a073292f0a10284

”சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கினைக் கடைப்பிடித்து, விரைவில் எம்மை அடைவாயாக!” என்று அருளி மறைந்தார் மகா கணபதி. அப்படியே செய்யத் துவங்கினார் புருசுண்டி. அவரின் பெருமையை நாரதர்மூலம் அறிந்த தேவேந்திரன், புருசுண்டியைத் தரிசிக்க பூலோகம் வந்தான். தவத்தில் ஈடுபட்டிருந்த புருசுண்டியிடம் பக்தனாக, யாசகனாக வந்து நின்றான் தேவேந்திரன். எது கேட்டாலும் தருவதாகக் கூறிய புருசுண்டியிடம், கற்பக விருட்சத்தைத் தரும்படி கேட்டான். அதன்படி, கற்பக விருட்சத்தை தேவேந்திரனுக்குத் தானமாகத் தந்தருளினார் புருசுண்டி. விநாயகர் தந்ததையே மனமுவந்து தானமாக இந்திரனுக்கு வழங்கிய அந்தக் கணத்தில், அங்கு தோன்றிய மகா கணபதி, புருசுண்டியை தன் திருப்பாதத்தில் சேர்த்துக்கொண்டு, அவருக்குப் பிறவா நிலையை அருளினார். கற்பக விருட்சமும் தேவலோகம் சென்றடைந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.