யார் இந்த தமிழ்வாணன்.. குழந்தைக் கதை முதல் க்ரைம் கதைகள் வரை எழுதி ரசிக்க வைத்த எழுத்துலகின் மன்னன்

கல்கண்டு வார இதழைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இல்லை. குமுதம், ஆனந்த விகடன் இதழ்களுக்குப் போட்டியாக இலக்கிய உலகிலும், வாராந்திரப் பத்திரிக்கை உலகிலும் வாரந்தோறும் இனிய தித்திப்பான பல்சுவை செய்திகளை வழங்கி வரும் அமுத ஊற்று. ஓர் இலக்கிய ஆர்வலருக்காகவே குமுதம் நிறுவனர் அண்ணாமலை தனியாக ஓர் பத்திரிக்கை ஆரம்பித்துக் கொடுத்தார் என்றால் அது தமிழ்வாணனுக்குத்தான்.

இலக்கிய உலகிலும், எழுத்துலகிலும் தமிழ்வாணனைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இல்லை. கருப்பு கண்ணாடியும், தொப்பியுமே அவரது அடையாளம். போஸ்கார்டில் பெறுநர் முகவரியில் கருப்பு கண்ணாடி தொப்பி வரைந்து சென்னை -10 என்று போட்டாலே நேரே அவரது அலுவலகத்திற்கு கடிதங்கள் வந்துவிடும் அளவிற்கு எழுத்துலகில் புதுமை படைத்தவர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவரது பெற்றோர் அவருக்கு இட்ட இயற்பெயர் ராமநாதன். ஆனால் எழுத்துலகில் நுழைந்த பிறகு திரு.வி.கல்யாண சுந்தரனார் இவருக்கு தமிழ்வாணன் என்ற பெயரை வைத்தார். எழுத்தாளர் வல்லிக்கண்ணன் நடத்திய கிராம ஊழியன் பத்திரிக்கையில் இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய தமிழ்வாணன் அங்கு 30 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தார்.

அங்கே பல எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது. கிராம ஊழியனில் ஆசிரியராகச் சில காலம் பணிபுரிந்தவர் பின் சென்னை வந்து சக்தி என்ற இதழை நடத்திய கோவிந்தன் என்பவரது மற்றொரு குழந்தைகள் இதழான அணில் பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார்.

சாதி ஆணவக் கொலைகள் பற்றி படம் எடுப்பீங்களா? மாரி செல்வராஜ் பரபரப்பு பேட்டி

தொடர்ந்து குமுதம் ஆசிரியர் ஏ.எஸ்.பி. அண்ணாமலை கல்கண்டு என்ற வார இதழினை ஆரம்பித்து அதனை தமிழ்வாணனிடம் ஒப்படைத்தார். கல்கண்டு தமிழ்வாணனின் எழுத்தில் தித்திப்பாகத் தொடங்கியது. இவருடைய ஒருபக்கக் கட்டுரைகளும், கதைகளும் புகழ் பெற்றவை. தொடர்ந்து சங்கர்லால் என்ற கற்பனைக் கதாபாத்திரத்தினைக் கொண்டு பல துப்பறியும் கதைகளை எழுதினார்.

எழுத, எழுத வற்றாத நீரூற்று போல கற்பனை வளம் சுரக்க தொடர்ந்து பல வெளிநாட்டு பயணக் கட்டுரைகளை தொடர்கதையாக எழுதினார். அதிலும் குறிப்பிட்ட கதை மாந்தர்களைப் புகுத்தி சுவராஸ்யம் குறையாமல் எழுத கல்கண்டு பல்கிப் பெருகியது. எழுத்துலகில் தமிழ்வாணனும் பிரபலமானார்.

இவர் எழுதிய அல்வாத்துண்டு, சுட்டுத்தள்ளு, பயமா இருக்கு போன்ற தலைப்புகளில் கதைத் தொகுப்புகளாக வெளிவந்தன. அவர் காலத்து சம எழுத்தாளர்களான ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், சுஜாதா போன்றோர் வரிசையில் முன்னிலை பெற்றார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் படிக்கும் வகையில் அவரது எழுத்து நடை இருக்கும்.

இப்படி எழுத்துலகிலும், இதழியல் உலகிலும் முடிசூடா மன்னனாக விளங்கிய தமிழ்வாணன் 1977-ல் மறைந்தார். அதன்பின் கல்கண்டு இதழை அவரது மகன் லேனா தமிழ்வாணனும், மணிமேகலைப் பிரசுரத்தை மற்றொரு மகனுமான ரவி தமிழ்வாணன் ஏற்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...