கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் அது பலாத்காரமே;; கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!!
கணவனாக இருந்தாலும் மனைவியிடம் பாலியல் ரீதியில் அத்துமீறி நடந்து கொண்டால் அது பலாத்காரமே என கர்நாடக உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மனைவி புகாரில் தன் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்வதை எதிர்த்து கணவர் தொடர்ந்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
திருமணம் என்பது பெண்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமான செயல்களை கட்டவீழ்த்து விடுவதற்கான உரிமம் அல்ல என்று கூறிய நீதிபதி திருமணத்தினால் மட்டும் ஆணுக்கு சிறப்புரிமை எதுவும் கிடைத்து விடாது என கூறினார்.
மனைவியின் உடல், சிந்தை மீது முற்றிலும் ஆண்களே ஆளுகை செலுத்த வேண்டும் என்ற பழமைவாத சிந்தனைகளை ஒழிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மனைவியின் சம்மதமின்றி கணவன் பாலியல் ரீதியாக அத்துமீறுவது உடல் மற்றும் உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். சட்டத்தை உருவாக்கும் இடத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற பாதிப்புகளை களைய நடவடிக்கை எடுப்பது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், திருமணத்துக்குப் பிந்தைய கட்டாய உறவு பலாத்காரமா? என்பதை சட்டத்தை இயற்றுபவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் மனைவி பலாத்கார புகார் கூறினால் அதனை கணவர் எதிர்கொள்ள வேண்டியது அவசியமில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.
