இனி பேருந்துகளில் சிசிடிவி கேமரா!! முதற்கட்டமாக 2,000 மாநகர பேருந்துகளில் பொருத்த திட்டம்;
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்னர் போக்குவரத்து துறையில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டு தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் உள்ளார்.
இந்த நிலையில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இருந்தாலும் மகளிருக்கு கட்டணமில்லா இலவச பயண நகர்ப்புற பேருந்துகளில் நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விரைவில் 2000 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக சென்னையில் 2000 மாநகரப் பேருந்துகளில் விரைவில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். பயணிகளின் முகங்களை கண்டறிய பரீட்சார்த்த முறையில் சில பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொழிற்சங்கங்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். புதிய பேருந்துகள் வாங்க ஜெர்மனி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பின் உதிரிபாகங்கள் வாங்க முடிவு எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்த வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் தகவல் அளித்துள்ளார். எலக்ட்ரிக் பைக்குகள் திடீர் தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து அறிக்கை தர போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பேருந்து பயணத்தில் ஏற்படும் இடையூறுகள் உள்ளிட்ட காரணங்களை புகார் தெரிவிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். பேருந்துகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அவசரகால பட்டண்களை கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவகுமார் கூறினார்.
