“நீங்கள் உங்கள் நிறுவனத்தில் சிறந்த பயிற்சியாளராக இல்லாவிட்டால், சிறந்த தலைவராக இருக்க முடியாது” என ‘ட்ரூநார்த் கன்சல்டிங்’ நிறுவனத்தின் வர்த்தக பயிற்சியாளர் திருமதி. ருச்சிர சவுதர்ய் கூறினார்.
ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ‘Human Is Not a Resource’ (HINAR) என்ற தலைமைப் பண்பு மேம்பாட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று (ஆகஸ்ட் 6) சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற திருமதி. ருச்சிரா, நிறுவன ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், “பயிற்சி அளிப்பது என்பது ஒரு தனி துறை அல்ல. அது நீங்கள் தலைவராக இருக்கும் நிறுவனத்தில் உங்களுடன் பணியாற்றுபவர்களின் மேம்பாட்டிற்காக நீங்கள் மேற்கொள்ளும் தினசரி செயல்முறையாகும்.
பெரிய எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்க வேண்டும் என்பது இல்லை. மேலும், ஏதோ ஒரு குறிப்பிட்ட நாட்கள் நடத்தப்படும் நிகழ்ச்சியும் அல்ல. அது ஒரு வாழ்வியல் செயல்முறை போன்றது. நீங்கள் தினமும் அதை செய்ய வேண்டும். உங்களுடன் பணியாற்றும் நபர்களின் திறனை மேம்படுத்த நீங்கள் அவருக்கு தினமும் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது உங்களுடைய திறமையையும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். அதை மேம்படுத்தவும் முடியும்” என்றார்.
இதேபோல், எச்.எல்.இ கிளாஸ்கோ நிறுவனத்தின் அதிகாரி (Chief Transformation Officer) திரு. அமித் கல்ரா, மஹிந்த்ரா ஃப்ர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ திரு. அசுதோஸ் பாண்டே, திறன் மேம்பாடு குறித்தும், தலைமைப் பண்பின் பயன்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து வர்த்தக தலைவர்களும் யோகா நிகழ்ச்சியிலும், சத்குருவின் வழிகாட்டுதல் தியானத்திலும் பங்கேற்றனர்.