Annamalai: பதவி விலகுகிறாரா அண்ணாமலை? – உண்மையை போட்டுடைத்த பாண்டே!

இன்று பாஜகவில் நடந்த கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவரான அண்ணாமலை பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம்: 

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “2024ம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கொடுக்க உள்ள சொற்ப சீட்டுகளுக்காக யார் காலையும் பிடிக்க மாட்டேன். 2026ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜகவிற்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. மே மாதம் வரை கர்நாடகா தேர்தலில் பிசியாக இருப்பேன். அதன் பின்னர் தான் தமிழகத்தில் கவனம் செலுத்த முடியும். இந்த விஷயங்கள் ஒத்துவந்தால் கட்சியில் தலைவராக தொடருவேன், இல்லையெல் சாதாரண தொண்டனாக நான் பணியாற்றுவேன்” எனக்கூறியதாக மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான பாண்டே தெரிவித்துள்ளார்.

ஜே.பி. நட்டா அட்வைஸ்: 

இதற்கு முன்னதாக தருமபுரியில் கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு வந்த பாஜக தேசிய தலைவர் நட்டாவுடன், அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்ட நெருங்கிய சிலர் மட்டுமே குளோஸ்டு ரூம் மீட்டிங் நடந்துள்ளது. அப்போது ஜே.பி.நட்டா, 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தே ஆக வேண்டும். அதனால் கொஞ்சம் அடங்கி வாசிங்க என அண்ணாமலையை எச்சரித்ததாக செய்திகள் வெளியாகின. இதையும் குறிப்பிட்டுள்ள பாண்டே, தனது கருத்தை அங்கேயே அண்ணாமலை பதிவு செய்துவிட்டதாகவும் அதற்கு இதுவரை எந்த முடிவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கூட்டத்தில் வானதி சீனிவாசன் ஒண்ணு சொல்ல, நாராயணன் திருப்பதி ஒண்ணு சொல்ல என பெரும் சலசலப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக அண்ணாமலையின் அதிரடி அறிவிப்பு பாஜக மாவட்ட செயலாளர்கள் வரை பரபரப்பை பற்றவைத்துள்ளது. பாஜகவை தொடர்ந்து 3வது முறையாக மத்திய அரசு கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதில் டெல்லி தலைமை தீயாய் உள்ளது. இதற்கு தமிழகத்திலும் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாய் இருப்பதாக கூறப்படுகிறது.

என்ன முடிவெடுப்பார் அண்ணாமலை?

எனவே தேசிய கட்சியான பாஜக தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அதனை அனுசரித்து போவதே மாநில கட்சி தலைவரான அண்ணாமலைக்கு நல்லது எனக்கூறியுள்ள அவர், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை அடைய உதவும் என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார். உடலில் எப்படி நுரையீரல், கல்லீரல், இதயம், மூளை என அனைத்தும் ஒன்றாக சேர்ந்து தனது வேலையை செய்கிறதோ?.. அதுபோல பாஜகவும் தலைமையின் பேச்சைக் கேட்டு செயல்பட வேண்டும் என அண்ணாமலைக்கு மறைமுக அட்வைஸ் கொடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.