பழனி தைப்பூசம் பக்தர்களுக்கு தடையா…..?! : கோவில் நிர்வாகத்தினர் பதில்.

முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு உண்டு. அந்த அறுபடை வீட்டில் ஒரு படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழாக்களின் போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய பழனிக்கு பக்தர்கள் படையெடுத்து வருவார்கள். குறிப்பாக தைப்பூசம் திருவிழாவை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருவர்.

அதேபோல் புத்தாண்டு, பொங்கல் ஆகிய தினங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய பழனிக்கு பாதயாத்திரையாக வருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்காக திண்டுக்கல்-ஆயக்குடி, அலங்கியம்-பழனி இடையே தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

தைப்பூச திருவிழாவிற்காக ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் காவடி சுமந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். சென்ற ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தைப்பூச திருவிழாவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அதனால் பக்தர்களின் வருகையும்  குறைந்தது. குறிப்பாக முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து கோவிலுக்கு பக்தர்கள் வருவது கட்டாயமாக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வருகை தருகின்றனர்.

தைப்பூச திருவிழாவுக்கு ஒருமாதமே உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தருகின்றனர். இதனால் பழனி கிரிவீதியிலும், நகரிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று எதிரொலியால் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வரும் தைப்பூசத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் பழனி தைப்பூச திருவிழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கோவில் நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். கைகளை கழுவ கிருமி நாசினி வைக்கப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல்வேறு அரசு துறைகளின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே பழனிக்கு வரும் பக்தர்கள் அரசு கூறியுள்ள  வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment