தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருதியும், பால் உற்பத்தியை பெருக்கவும் கறவை மாடுகளுக்கு காப்பீட்டுத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சேலம் தளவாய்பட்டியில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆவின் பால் நிறுவனத்தில் பால் பதப்படுத்தப்படும் பகுதி , பால் பாக்கெட்டுகள் தயாரிக்கும் இடம் மற்றும் உப பொருட்கள் தயாரிக்கும் பகுதி, ஐஸ் கிரீம் உற்பத்தி செய்யும் பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆவின் நிர்வாகத்தால் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்படும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டு, ஐஸ்கிரீம் சுவைத்து பார்த்து, அதன் தரம் குறித்து ஆய்வு நடத்தினார்.
தொடர்ந்து பால் பவுடர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பாலின் அளவு குறித்தும் அதிகாரிகளிடையே கேட்டறிந்தார். தொடர்ந்து ஆவின் நிர்வாகத்தின் அதிகாரிகள் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் , கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்திய அமைச்சர் மனோ தங்கராஜ், பால் உற்பத்தியை பெருக்கவும் ஆவின் நிர்வாகத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலம் அனுமதியில்லாமல் செயல்படும் பால் குளிரூட்டு நிலையங்கள் மற்றும் பால் விற்பனை நிலையங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்று அனுமதி இல்லாமல் தரச் சான்றிதழ் இல்லாமல் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், மக்களை நேரடியாக சந்திக்கக்கூடிய துறையாக இந்த ஆவின் நிர்வாகம் உள்ளதாகவும், ஆவின் நிர்வாகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் விரைவில் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்த அவர், பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் தற்போது முதல் கட்டமாக தமிழக முழுவதும் 2 லட்சம் கறவை மாடுகள் கொடுக்கும் திட்டத்தை துவங்கி உள்ளதாகவும், இதற்காக உள்ளூர் வங்கி மூலமாக கடன் வசதி செய்து கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுவையில் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கறவை மாடுகளுக்கு காப்பீடு திட்டம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும் , இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவித்தார்.
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் , இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார். தொடர்ந்து கூறியவர் விவசாயிகளுக்கு மிக மிக குறைந்த விலையில் கால்நடைகளுக்கான தீவனங்கள் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் எந்தவிதமான அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக வெளி மாநிலங்களுக்கு பால் வழங்குவது குறித்த புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும், இதுகுறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
அமைச்சரின் ஆய்வின் பொழுது ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, ஆவின் பொது மேலாளர் விஜயபாபு உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.