ஜனவரி 26 ஆம் நாள் நம் இந்தியாவில் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 75 வது குடியரசு தின விழா சீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் டெல்லியில் நடைபெற்ற வாகன அணிவகுப்பு ஊர்தியில் நம் தமிழகத்தை சார்ந்த வாகனமும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் பள்ளிகள் அன்றைய தினம் திறக்கப்பட்டு குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. தேசிய கொடியினை ஏற்றி ஆசிரியர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் தேசிய கொடிக்கு அவமரியாதை நடந்தது போல் சம்பவம் ஒன்று பள்ளி ஒன்றில் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தேசியக்கொடியானது இரவு நேரத்தில் கீழே இறக்கப்படாமல் பள்ளியில் பறந்தது சர்ச்சைக்குரியதாக மாறியது.
இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே அரசு பள்ளியில் இரவு நேரத்தில் தேசியக் கொடி பறந்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தலைமை ஆசிரியர் விஜயா, ஆசிரியர்கள் பிரியதர்ஷினி, சூரிய கலா வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மாதானம் ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் குடியரசு தினத்தன்று இரவில் தேசியக்கொடி பறந்தது சர்ச்சைக்குரியதாக மாறி உள்ளது.