இன்றைய தினம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் சில முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு என்றும் இரண்டாவது நபர் போட்டியிட வேண்டும் என்றால் குறைந்தது ஐந்து ஆண்டுகள் கட்சியில் பணியாற்றி இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சோனியா காந்தியும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேரணி நடத்தப்படும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ராகுல்காந்தி சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
அதன்படி வியர்வை சிந்தாமல் எதுவும் நடக்காது மக்களிடம் செல்வதுதான் இருக்கக்கூடிய ஒரே வழி என்று கூறியுள்ளார். மூத்த தலைவரோ அல்லது இளைய தலைவரோ கட்சியில் யாராக இருந்தாலும் அவர்கள் மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
எந்த ஒரு பாகுபாடின்றி அனைவரின் கருத்துகளையும் காங்கிரஸ் கட்சி கேட்கும் இதுதான் காங்கிரஸ் கட்சியின் டிஎன்ஏ என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் காங்கிரஸில் மாவட்ட நிர்வாக அளவில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
நிர்வாக ரீதியாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சியும் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிராந்தியங்களின் தொகுப்புதான் இந்தியா என அரசியல் சாசனத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்தியா எந்த ஒரு தனி நபருக்கும், தனி கட்சிக்கும் சொந்தமான நாடு கிடையாது என்றும் கூறினார்.