
தமிழகம்
சசிகலாவின் சொத்துகள் முடக்கம்: வருமான வரித்துறையினர் அதிரடி!!
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2017-ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக சசிகலா சிறை தண்டனை அனுபவித்து பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டது அடுத்தடுத்த விசாரணையில் தெரியவந்தது. இதன் அடிப்படையில் தற்போது வரை சுமார் 2 ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது.
இந்த சூழலில் தற்போது சென்னை தியாகராயநகரில் இயங்கிவரும் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகள் பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர்.
இதற்கான உரிய ஆவணம் மற்றும் நோட்டீசை அந்த கட்டிடத்தில் இன்று ஓட்ட இருப்பதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும், வரும் காலங்களில் பல கோடி சொத்துக்கள் மீண்டும் முடக்க இருப்பதாக வருமானவரித் துறையினர் கூறியுள்ளனர்.
