புதுச்சேரியில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று கிடுகிடுவென அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 390 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர்களில் 13 பேர் புதுச்சேரியையும், 19 பேர் காரைக்காலையும், 5 பேர் ஏனாமையும், 2 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் ஆவர்.நேற்று 32 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 6 பேர், வீடுகளில் 139 பேர் என 145 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென ஆட்சியர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், மருத்துவமனைகள், தியேட்டர்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.