
தமிழகம்
விருத்தாசலம்: நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் இளம்பெண் காயம்…
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வலசை கிராமத்தைச் சேர்ந்த மணி இவரது மகன் காசிப்பிள்ளை (வயது 32). இவர் பால் வியாபாரம் செய்து வருவதாக தெரிகிறது. இவருக்கும் தொட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நிலவழகன் மகள் சாந்தகுமாரிக்கும் கடந்த ஆறு வருடம் முன்பு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதில் 2 மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சாந்தகுமாரிக்கு கடந்த மூன்று மாதம் முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று இரவு காசிப்பிள்ளை அவரது மனைவி குழந்தை மற்றும் தாயுடன் வீட்டின் வெளியே அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது திடீரென நாட்டுத் துப்பாக்கி சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தப்போது சாந்தகுமாரி மீது இடுப்பில் குண்டு பாய்ந்தது மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தாய் கருப்பாயி மற்றும் அக்கா சுமதி ஆகியோர் பார்த்தப்போது ஒரு நபர் நெற்றியில் லைட் கட்டிக் கொண்டு அவர்கள் வீட்டை நோக்கி அடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர்களை காசிப்பிள்ளை துரத்தி பிடிக்க சென்ற பொழுது அவர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியதாக தெரிவித்தனர். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் இருந்த சாந்தகுமாரியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு மர்மநபர்களையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
