நாளை இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவிற்காக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.. இந்த வாக்குச்சாவடிகளில் 1206 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. அதேபோல் 1430 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 310 விவிபேட் இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு வாக்குச்சாவடிகளுக்கு காலை முதல் அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குச்சாவடி அலுவலர்கள் பொறுப்பேற்று வாக்கு சாவடிகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல் விவிபேட் இயந்திரமும் கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டு வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டனர். மாலை 6:00 மணிக்குள்ளாக வாக்குச்சாவடிகளை தயார் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டு வாக்குச்சாவடிகள் வாக்குப்பதிவிற்கான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குடிநீர், கழிவறை மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் செல்வதற்கான சாய்தள பாதை மற்றும் சக்கர நாற்காலி ஆகியவையும் வைக்கப்பட்டுள்ளன. நாளை காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது அதற்கு முன்பாக முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின் தேர்தல் நடைபெற உள்ளது.