தங்கச்சி பாடலை காதல் பாட்டாக்கிய இசைஞானி.. பெரும் தோல்வி படத்தை தோளில் தாங்கி ஹிட் கொடுத்த இளையராஜா..

மலையாள இயக்குநர் பாசில் படங்கள் என்றாலே ஒரு மென்மையும், உணர்வுப் பூர்வமான ஒரு மெல்லிய சோகமும், அமைதியும் கலந்திருக்கும். 1985-ல் பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழில் கால்பதித்தவர் தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்தார்.

முதல் படத்திலேயே பாட்டி-பேத்தியின் உறவினைப் பேசி ரசிகர்களைக் கவனிக்க வைத்தவர் தொடர்ந்து பூவிழி வாசலிலே, என்பொம்முகுட்டி அம்மாவுக்கு போன்ற படங்களை எடுத்தார். மேலும் விஜய்யை வைத்து காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற அவரின் கேரியரைத் தூக்கி விட்ட படங்களைக் கொடுத்தவரும் இவரே.

இந்நிலையில் அடுத்ததாக அக்கா-தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒரு படம் இயக்கலாம் என்று எண்ணி அவரும் அவர் நண்பர்களும் இணைந்து தயாரித்து அம்பிகா-ரேவதி சகோதரிகளாக நடித்த ‘காக்கோத்திக் காவிலே அப்பூப்பன் தாடிகள்’ என்ற படத்தினை எடுத்தனர். இதில் கமல் என்பவர் இயக்குநர். திரைக்கதை எழுதியவர் பாசில்.

படம் வெற்றிகரமாக கேரளத்தில் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருந்தது. அதையே தமிழுக்கு எடுக்க நினைத்து பாடல் ரெக்கார்டிங்கில் இறங்கினார் பாசில். வழக்கம் போல இளையராஜாவிடம் காட்சியைச் சொல்ல.. பிறந்தது தான் பொங்கலும், பொங்கலும் வச்சு.. மஞ்சள எடு தங்கச்சி.. தங்கச்சி.. என்ற பாடல்.

காக்கோத்திப்படத்தின் கதையானது குழந்தையாக இருக்கும் போது ரேவதியை பிச்சைக்காரன் ஒருவன் தூக்கிச்சென்று விடுவான். பதினாறு வருடம் கழித்து அந்த குழந்தை பெரியவளாகி ரேவதியாக அவர்கள் ஊருக்கே பிச்சைக்காரர்கள் வருவார்கள். அதனால் ‘வருஷம்-16’ எனப்பெயர் வைத்தார் பாசில்.

பின்னர் இளையராஜா கதையைக் கேட்டவுடன், “பிச்சைக்காரர்கள் கதையா? இது ஓடாது…. தமிழில் இந்த மாதிரி கதைகள் ஓடினதா சரித்திரமே இல்லை… வேற கதையை பாருங்க” எனச் சொல்ல இயக்குநர் பாசிலுக்கு குழப்பம் வந்தது.

பின்னர் மலையாளத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த தோல்விப் படமான ‘என்னென்னும் கண்ணேட்டன்ட’ படத்தின் கதையை சொல்ல இளையராஜா இந்த படத்தின் கதை நன்றாக உள்ளது. நிச்சயம் ஹிட் ஆகும்.

ஆனால் கதையில் சற்று மாறுதல்கள் செய்து வாருங்கள் என்று கூறியிருக்கிறார். பின் இயக்குநர் பாசில் வருஷம் 16 டைட்டிலுக்கு ஏற்றாற்போல் நாயகன் கண்ணன் 16 வருடம் சிறைக்கு போவதாக மாற்றி பலவற்றை சேர்த்து இளையராஜாவின் பாடல்களோடு வருஷம் 16 படத்தினை இயக்கினார்.

இப்போது முதலில் இசையமைத்த தங்கச்சி பாட்டை என்ன செய்வது? அதையே இளையராஜா சரணங்களில் காதல் வரிகளாக்கி ‘நான் தூங்கியே நாளாச்சுது…’ என்று எல்லாம் சேர்த்துக் கொடுக்க அக்கா-தங்கைப் பாடல் வாலியின் வரிகளில் பி.சுசீலாவின் குரலில் காதல் பாடலாக மாறி ஹிட் ஆனது. இது நடிகை குஷ்புவுக்கு ஹீரோயினாக தமிழில் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews