அப்பவே புதுடெக்னிக்கைக் கையாண்ட இசைஞானி… அசந்து போன கவிஞர் வாலி!

இளையராஜா தான் இசை அமைக்கும் படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசத்தைக் கொண்டு வர வேண்டும் என்று முனைப்பு காட்டுவார். அந்த வகையில் தான் ‘சிட்டுக்குருவி’ படத்தின் பாடலும் அமைந்தது. அந்தப் பாடலில் அவருக்கு அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது. அதாவது கவுண்டர்பாயிண்ட் டெக்னிக்கை பயன்படுத்த நினைத்தார். இந்த டெக்னிக்கைப் பற்றி நமக்குத் தெரியாது. ஏன்னா இது மேல்நாட்டு இசை.

இது எப்படி என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பல டியூன்கள் ஒரே நேரத்தில் இசைக்கப்படும். அதே நேரம் இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஆண், பெண் தனித்தனியாகப் பாடுவார்கள்.

இருவருடைய வரிகளையும் பிரித்துப் படித்துப் பார்த்தால் தனித்தனி அர்த்தம் வரும். அப்படி இந்தப் பாட்டை எழுத வேண்டும் என்று கேட்டு வாங்கி இசை அமைத்தார் இளையராஜா. அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல் கவிஞர் வாலியும் தான் ஒரு கவிஞானி என பாடலை சூப்பராக எழுதி நிரூபித்து விட்டார்.

இந்தப் பாடலைப் பற்றி இளையராஜா இப்படி சொன்னார்.

இது மேல்நாட்டு இசையில் கவுண்டர்பாயிண்ட் (Counterpoint) என்ற ஒரு விஷயம் உள்ளது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு டியூன்கள் ஒரே நேரத்தில் இசைக்கப்படுவது. அதில் ஹார்மோனி என்ற அம்சத்தை உள்ளடங்கி இருக்க வேண்டும். இதை எனது 2வது படமான ‘பாலூட்டி வளர்த்த கிளி’ படத்திலேயே தொடங்கி விட்டேன். அதில் வரும் ‘நான் பேச வந்தேன்’ பாடலில் இதைக் கொண்டு வந்தேன். அதில் எஸ்பிபி ஒரு டியூனில் ‘ஹம்’ செய்ய எஸ்.ஜானகி வேறு டியூனில் ‘ஹம்’ செய்வார்.

சிட்டுக்குருவி படத்தின் இயக்குனர்கள் தேவ்ராஜ், மோகன் என்ற இரட்டையர். இவர்களில் தேவ்ராஜ் எப்போதும் பரீட்சார்த்தமான முயற்சிகளில் ஈடுபடுவார். இந்தப் பாடலைப் பற்றி இளையராஜா சொன்னதும் உடனே சம்மதம் கொடுத்துவிட்டார்.

பாடலுக்கான சூழல் இதுதான். அதாவது காதலனும், காதலியும் தங்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருப்பார்கள். அப்போது காதலனின் உள்ளமும், காதலியின் உள்ளமும் கலந்து பாட வேண்டும்.

SK
SK

கவிஞர் வாலியோ இரவு நேரம் என்று கூட பார்க்காமல் பாடல் எழுத ஒத்துழைப்புக் கொடுத்தார். இளையராஜா கவிஞரிடம் பாடலைப் பற்றி விளக்க, வாலியோ, ‘என்னய்யா நீ இந்த நட்ட நடு ராத்திரியில சிட்டுக்குருவிக்கு சிட்டப் பிச்சிக்கிற மாதிரி ஐடியா கொடுக்குற’ என எரிச்சல் பட்டு, ஒரு சேம்பிள் பாட்டு பாடு என்றார்.

அதன்பிறகு இளையராஜாவும், கங்கை அமரனும் சேம்பிள் பாடலைப் பாடிக் காட்டினர். அதன்பிறகு விறுவிறு என எழுதித் தள்ளிவிட்டார் வாலி. பாடல் இதுதான்.

‘என் கண்மணி இளமாங்கனி, சிரிக்கின்றதேன்? நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ? உன் காதலி உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன்? நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ? என் மன்னவன் எனைப் பார்த்ததும் கதை சொல்கிறான். அம்மம்மா… இன்னும் கேட்கத் தூண்டுமோ? உன் காதலன் ஓராயிரம் கதை சொல்கிறான் நீ ரசிக்கின்றக் கன்னியில்லையோ? மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொட வேண்டுமே. இரு மேனி எங்கும் விரல்கள் பட வேண்டுமே… அதற்கான நேரம் ஒன்று வர வேண்டுமே. அடையாளச் சின்னம் ஒன்று தர வேண்டுமே’ என வரிகள் பாடலில் நயமாக வரும்.

இதை ஆணும், பெண்ணும் வேறு வேறு டியூன்களில் மாற்றி மாற்றிப் பாடுவார்கள். இடையே தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு என இளையராஜாவின் சகோதரர் பாஸ்கர் டயலாக் பேச அது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.

1978ல் சிவகுமார், சுமித்ரா நடிப்பில் உருவான படம் சிட்டுக்குருவி. இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட் தான். அடடட மாமரக்கிளியே, உன்ன நம்பி நெத்தியிலே பாடல்களும் இந்தப் படத்தில் தான் உள்ளன.

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews