சொந்த வீடு கட்டணுமா? நீங்கள் செய்ய வேண்டிய காரியம் இதுதான்..!

சின்னதா இருந்தாலும் நமக்குன்னு ஒரு சொந்த வீடு இருக்கணும். அப்பதான் ஒருவித நிம்மதியே கிடைக்கும். எவ்வளவு நாள் தான் வாடகை கொடுக்கறது? கடன உடன வாங்கியாவது வீட்டைக் கட்டிடணும்னு தான் நினைப்பாங்க.

கல்யாணம் பண்ணிப்பார்…வீட்டைக்கட்டிப்பார்னு சும்மாவா சொன்னாங்க…அப்படி கட்டறதுங்கறது எல்லோராலும் சுலபமா முடியற காரியமில்ல. அதுக்கும் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கணும். அப்ப தான் கட்ட முடியும். வழிபாடுகளும் உண்டு. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஒரு சிலர் வங்கியில் கடன் வாங்குவாங்க. இல்லாவிட்டால் வேலை செய்யும் இடத்தில் லோன் போடுவாங்க. சிலர் பிளாட்டையே வாங்குவாங்க. இல்லையேல் வீடு கட்டுவாங்க. எது எப்படி இருந்தாலும் சொந்தமாக வீடு வேணும்.

 

முதல்ல வீடு வாங்கணும்னு தீர்மானித்தால் நம்ம கிட்ட எவ்வளவு இருக்கு? எவ்வளவு கடன் வாங்கணும்? அப்படி வாங்குனா நம்மால அடைக்க முடியுமா? எல்லாத்தையும் பொருளாதார ரீதியாகவும் யோசிக்க வேண்டும். எப்பவுமே நம்முடைய தகுதிக்கு மேல நாம வாங்கி பின்னால கடனை அடைக்க முடியாம கஷ்டப்படக்கூடாது.

Bhuma devi
Bhuma devi

நிலம் சம்பந்தமான எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் அதை வாங்குவதற்கு நமக்கு அருள்புரியும் தெய்வம் பூமாதேவி. இவர் நமக்குக் கருணை காட்ட வேண்டும். அப்போது தான் நம்மால் இடம் வாங்கி வீடு கட்ட முடியும். இவர் எங்கே இருக்கிறார் என்றால் எம்பெருமான் நாராயணன் எழுந்தருளி உள்ள இடத்தில் அவரும் இருந்து நமக்கு அருள்புரிகிறார்.

பல ஆலயங்களில் நாம பார்ப்போம். பெருமாள் பூதேவி சமேதராக எழுந்தருளியுள்ளார். பெருமாளுக்குப் பல பெயர்கள் உண்டு. அம்பாளுக்கு அந்த ஒரு பெயர் தான். அந்த பூதேவியை நாம் உள்ளன்போடு வணங்கும்போது நிலம் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து நமக்கு கைகூடும்.

இப்போ அது பிரச்சனையா இருந்தாலும் சரி. சொந்தமா வீடு வாங்கணும்னாலும் சரி. நிலத்தில் என்ன தேவையா இருந்தாலும் சரி. நாம அவரை வழிபடலாம். பூமிக்கே பெரிய பிரச்சனை ஏற்பட்ட போது அந்த பூமியைக் காப்பாற்ற எம்பெருமான் எடுத்த அவதாரம் தான் வராக மூர்த்தி அவதாரம்.

Varagamoorthy
Varagamoorthy

அவர் எழுந்தருளி உள்ள ஆலயத்துக்குச் சென்று வணங்குகிற போது நிலம் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளும் தீரும். சில கோவில்களில் வராகரையே பூவராகவ பெருமாள் என்ற பெயரில் நாம் காண முடியும். அதேபோல சிவபெருமான் எழுந்தருளிய பஞ்சபூத தலங்களில் ஒன்று தான் மண். அந்த மண்ணுக்குரிய தலம் காஞ்சிபுரம். இங்கு எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரரை வழிபட்டு வரலாம்.

பஞ்சபூத தலங்கள் பல இடங்களில் உள்ளன. இருந்தாலும் அவற்றில் முக்கியமான இடமாக மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான் பஞ்சபூதங்களில் மண்ணுக்கு உரிய தெய்வமாக எழுந்தருள்கிறார். சங்கரன்கோவிலிலும் சுவாமி பூமி தெய்வமாகவே காட்சி தருகிறார்.

chennai yekambareswarar
chennai yekambareswarar koil

சென்னையில் உள்ள தங்கசாலையில் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலேயே சிவபெருமான் காட்சி தருகிறார். இதை சென்னை பஞ்சபூத தலம் என்றே சொல்வர். திருச்சி அருகில் உள்ள மணச்சநல்லூரில் எழுந்தருளியுள்ள சிவனுக்கு பூமிநாத சுவாமி என்று பெயர். அவரும் பூமி சம்பந்தப்பட்ட நலனை வழங்கக்கூடியவர். இங்கு மண் வைத்து பூஜை பண்ணி கொடுப்பார்கள்.

சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு செங்கல் கட்டியைத் தங்கக்கட்டியாக மாற்றிக் கொடுத்த தலம் திருப்புகலூர். இங்கு செங்கல் வைத்து பூஜை செய்து கொடுப்பார்கள்.

ஒரு ஜாதகத்தில் செவ்வாயின் ஆதிக்கம் சிறப்பாக இருந்தாலும் சொந்த வீடு அமையும். இப்படி அமையாதவர்கள் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை வணங்கி வரலாம்.

சென்னை அருகில் உள்ள சிறுவாபுரி திருத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு கல்யாணமும் செய்து வைக்கிறார். வீட்டையும் கட்ட வைக்கிறார். இந்த தலத்தில் அருணகிரி நாதர் திருப்புகழைப் பாடியுள்ளார். அந்தப் பாடலை இப்போது படிக்கலாம். தினமும் இதைப் பாராயணம் செய்து வழிபட சொந்த வீடு கட்டும் யோகம் சீக்கிரமாக வரும்.

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற …… வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு …… மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு …… மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி …… வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள …… வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு …… வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய …… முருகேசா

சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு …… பெருமாளே

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.