விஏஓ முதல் தாசில்தார் வரை லஞ்சம் வேண்டாம்.. தானியங்கி முறையில் பட்டா மாறுதல் செய்வது எப்படி?

சென்னை: விஏஓ முதல் தாசில்தார் வரை யாருக்குமே லஞ்சம் தராமல் பட்டாவை உங்கள் பெயரில் தானியங்கி முறையில் மாற்ற முடியும். தமிழக பத்திரப்பதிவு துறை கடந்த ஜூன் மாதம் 15-ம்தேதி முதல், இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி உள்ளது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் , பட்டா மாறுதல் தொடர்பான தகவல்கள் கிரையம் கொடுப்பவருக்கும், கிரையம் பெறுபவருக்கும் உடனுக்குடன் எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தால் ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைக்க போகிறது..

பட்டா பெயர் மாற்றம் செய்ய முன்பு விஏஓவிடம் விண்ணப்பித்து, நில அளவையர் நேரில் வந்து அளந்து அதன்பிறகு தாசில்தார் வரை போய் அந்த நிலம் சிக்கல் இல்லாதது என்பதை கண்டறிந்து இறுதியாக பட்டா வழங்குவார். இதற்கு நிறைய அலைச்சல் இருந்து வருகிறது. அத்துடன் கையூட்டு கொடுக்க வேண்டிய நிலை சில நேரங்களில் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்,

ஆனால் தற்போது தானியங்கி முறையில் பட்டா மாறுதல் தற்போது செய்யப்படும் காரணத்தால். சொத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் இது தொடர்பான தகவல்களை பதிவுத்துறையே வருவாய்துறைக்கு தெரிவித்து விடும். நீங்கள் போய் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கத் தேவையில்லை. பதிவுத்துறை அளிக்கும் தகவலின் அடிப்படையிலேயே பட்டா வழங்கப்படும். முழுக்க முழுக்க ஆட்டோமெட்டிக்காக பத்திரப்பதிவு முடிந்த உடன் பட்டா உங்களை தேடி வந்து விடும். இதன் மூலம் இனி உங்களுக்கு காலதாமதம் இன்றி பட்டா கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தானியங்கி பட்டா மாறுதல் திட்டம் எப்படி செயல்படுத்தப்படும்: பத்திரப் பதிவுக்கு பின்பு இணையவழியில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல் தொடர்பான தகவல்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரிடம் இருந்து குறுஞ்செய்தி (SMS) வாயிலாக கிரையம் கொடுப்பவர், பெறுபவர் இருவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. உட்பிரிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாத நில கிரையங்களில் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட உடனே பட்டா மாற்றம் தானியங்கியாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு கிரையம் பெறுபவர் தங்கள் செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்.

தானியங்கி பட்டா மாறுதல் ஆவணம் தயாரிப்பது எப்படி: மேலும் சிக்கல் வராமல் இருக்க பத்திரப்பதிவுக்கான ஆவணத் தயாரிப்பின் போது சில விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அப்படி இருந்தால் தான் கிரையம் மற்றும் உரிமை மாற்றம் செய்யும் நபர் பெயரில் பட்டா இருப்பது உறுதியாகும்.

இதற்கு ஆவணங்களை சரியாக தயாரிக்க வேண்டும். அதாவது கிரையம் மற்றும் உரிமை மாற்றம் செய்யப்படும் சொத்து விவரமும் அளவுகளும், நான்கெல்லைகளும் வருவாய்த்துறை நடப்பு சான்றுகளுடன் ஒத்திருப்பதை உறுதி செய்து கொண்டு அதன்படி ஆவணம் தயாரிக்க வேண்டியது அவசியம் ஆகும். அத்துடன் முன் ஆவணச் சொத்து இதர விவரங்களை சரிபார்த்து பத்திர ஆவணம் தயாரிக்க வேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சொத்து வரியின் கட்டண ரசீது, தண்ணீர் வரி ரசீது, வரிவிதிப்பு பெயர்களை சரிபார்த்து பத்திர ஆவணங்களை நீங்கள் கண்டிப்பாக தயாரிக்க வேண்டும்.

ஒருவேளை இறந்தவர் பெயரில் பட்டா இருப்பின் பட்டாவில் வாரிசுகள் பெயரை சேர்த்த பின் ஆவணம் கண்டிப்பாக தயாரிக்க வேண்டியது அவசியம ஆகும். கூட்டுப்பட்டா என்றால், தனிப்பட்டாவாக மாற்றியபின் ஆவணம் தயாரிப்பது அவசியம். இந்த விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உறுதி செய்து உங்களுக்கு தானியங்கி முறையில் பட்டா கிடைத்துவிடும். யாருக்கும் நீங்கள் லஞ்சம் தர வேண்டிய அவசியமே இருக்காது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews