அட்சய திருதியை வாங்க அல்ல கொடுக்கும் நாள்..! செல்வ வளம் மேலும் மேலும் பெருகணுமா.. இந்த 2 பொருள்களைக் கண்டிப்பா வாங்குங்க..!

அட்சய திருதியை மகாலெட்சுமிக்கு விசேஷமான நாள். இவரது அருள்பார்வை பட்டு சாதாரண ஏழை ஒருவருக்கு தங்க நெல்லிக்கனி மழை பொழிந்ததாம். இதற்கு காரணமானவர் ஆதிசங்கரர். இவர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் இந்த நாளில் தான் இயற்றப்பட்டது. சிவபெருமான் பிச்சாடனார் தோற்றத்தில் வரும்போது அம்பாள் அன்னபூரணியாய் அவதரித்து அவருக்கு உணவு வழங்கிய நாள் இது தான்.

பாண்டவர்கள் அட்சய பாத்திரத்தைப் பெற்ற நாளும் இதுதான். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நாள் நாளை 10.5.2024 (வெள்ளிக்கிழமை) வருகிறது. இந்த நாளில் தானமும் வழிபாடும் செய்ய வேண்டும்.

இது நாம் வாங்கி வைக்கும் நாள் அல்ல. தானம் செய்யக்கூடிய நாள். அப்படி செய்தால் நம்மிடம் உள்ள செல்வங்கள் வளரும் நாள். இன்றைய சூழலில் தங்கம் வாங்கவே முடியாது. அந்த அளவு விலைவாசி ஏறிவிட்டது. கல்யாணத்திற்கு நகை வாங்குபவர்கள் இந்த நாளில் வாங்கலாம். அதற்காக கண்டிப்பாக இந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்க வேண்டும் என்று கட்டாயமில்லை. இந்த நாளில் வாய்ப்பு உள்ளவர்கள் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம்.

Gold coin
Gold coin

இந்த நாள் மகாலட்சுமிக்கு உரிய நாள். அதனால் அவளோடு தொடர்புடைய பொருளை வாங்க வேண்டும். மகாலட்சுமிக்கு தங்கத்தை விட அதிகமாகப் பிடித்தது கல் உப்பு. ஏன்னா அவள் பாற்கடலில் தான் அவதாரம் செய்கிறாள். அந்த அடையாளமாகத் தான் நாம் ரொம்ப காலமாகக் கல் உப்பைப் பயன்படுத்துகிறோம்.

அதனால் தான் விளக்கு வைத்தால் உப்பு யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். அதனால் அட்சய திருதியை அன்று இந்த கல் உப்பையும், மஞ்சளையும் வாங்கிக் கொள்ள வேண்டும்.

இவற்றை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அரிசி, பருப்பு, கோதுமை, துணி ஆகியவற்றைத் தானமாகக் கொடுக்கலாம். இவை எல்லாவற்றிலும் தலைசிறந்த தானம் அன்னதானம்.

Uppu, Manjal
Uppu, Manjal

ஏதாவது 2 உயிரினங்களுக்கு அன்று சாப்பாடு கொடுக்க வேண்டும். இது நமது செல்வ வளத்தை மேலும் பெருக்கும். இன்று நாம் வீட்டில் கல்கண்டு சாதம் அல்லது பால் பாயசம் செய்து நைவேத்தியமாக வைத்துக் கொள்ளலாம். அன்றைய நாளில் மகாலட்சுமி படத்தை துடைத்து சந்தனம், குங்குமம் வைத்துக் கொள்ளலாம். வெள்ளை நிற மலர்கள், செந்தாமரையை வைத்து பூஜிக்கலாம். 108 போற்றிகள்,

கனகதாரா ஸ்தோத்திரம் படிக்கலாம். குங்கும அர்ச்சனை செய்து வழிபடலாம். பக்கத்தில் உள்ள கோவிலுக்கும் சென்று வழிபடலாம். நம்மைச் சார்ந்துள்ள ஏழை எளியவர்களுக்கு நம்மால் என்ன முடியுமோ அந்த தானத்தை செய்யலாம். இந்த நாள் தானத்திற்கு மிக மிகச் சிறப்பான நாள். வெள்ளிக்கிழமை வருவதால் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.

10.05.2024 அன்று காலை 6.33 மணிக்குத் துவங்கி மறுநாள் அதிகாலை 4.56 மணி வரை திருதியை திதி வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை சுக்கிர ஓரை. காலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் காலை பூஜை அல்லது காலை 9 மணி முதல் 10 மணி வரைக்குள் பூஜையை முடித்துக் கொள்ளலாம். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சுக்கிர ஓரை. அதனால் 1 மணி முதல் 1.30 மணி வரை கற்கண்டு சாதம் படையலிட்டு பூஜை செய்யலாம். மாலை வேளை என்றால் சுக்கிர ஓரை 8 மணி முதல் 9 மணி வரை உள்ளது.

மாலை 6 மணி முதல் 9 மணி வரை மகாலட்சுமி வழிபாட்டை செய்து கொள்ளலாம். யாருக்கு எந்த நேரத்தில் வாய்ப்பு இருக்கிறதோ அந்த நேரத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சிலருக்கு கடை ஆரம்பிப்பது, பைக் வாங்குவது, பட்டுப்புடவை வாங்குவது என்றாலும் வாங்கலாம். இது அமாவாசையில் வரக்கூடிய சித்திரை மாத வளர்பிறை திருதியை. அதனால் அன்று நாம் நல்ல விஷயங்களைத் தொடங்குவது வளரும் என்பது நிச்சயம்.

மேற்கண்ட தகவலை திருமுருக கிருபானந்த வாரியாரின் மாணவி தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews