சூலைநோய் கொண்ட பாண்டியனுக்கு ஞானசம்பந்தர் கொடுத்த அற்புத வைத்தியம்….! கண்ணன் வெண்ணை உண்ண காரணம்…!

ஒருகாலத்தில் மார்கழி மாதம் என்றாலே தெருக்களில் பஜனை உலா வரும். இளம் சிறார்களும், பெரியோர்களும் பக்தி மணம் கமழ பாடல்களைப் பாடித் தெரு தெருவாக வலம் வருவர். இப்போதும் சில இடங்களில் நடக்கிறது. ஆனால் முன்பு போல் கூட்டம் இல்லை. இந்தப் பஜனையில் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களைக் கேட்கும்போது மனதுக்கு இதமாக இருக்கும். அந்த வகையில் இன்று மார்கழி 7 (22.12.2022) பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.

மார்கழி 7ம் நாள் பாடல் இது. மாணிக்கவாசகர் அருளியது.

Markali 7
Markali 7

இந்தப்பாடலைக் கேட்கும்போது அதனுடன் ஒன்றிணையலாம். மாணிக்கவாசகரின் வரிகள் அப்படிப்பட்டவை. இந்தப் பாடலில் அவர் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்….என்கிறார். திருநீறு வைப்பது, ருத்ராட்சம் அணிவது சிவசின்னங்கள்.

இப்படி அணிந்து சிவநாமம் சொல்வது, சிவனடியார்களைக் கண்டால் வழிபடுவது, ஆலயத்திற்குப் போய் உழவாரப் பணி செய்வது, பூஜைக்குரிய பொருள்களை வாங்கிக் கொடுப்பது என வேலைகள் செய்யும் அடியார்கள் சிவனடியார்கள். இவர்களை வழியில் எங்கு பார்த்தாலும் சிவ சிவா என்று சொல்ல வேண்டும். அப்படி சிவாயநம என்று நாமத்தை சொல்லும் பெண்ணே…இப்ப ஏன் பேசாம இருக்கே என்று சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

இந்த சின்னங்களைக் காப்பாற்ற எத்தனையோ சிவனடியார்கள் போராடியிருக்காங்க. அதிலும் குறிப்பாக மதுரையை ஆண்ட மங்கையர்க்கரசி காலத்தில் சமண சமயம் மேலோங்கியிருந்தது. மன்னனே சமண சமயத்திற்கு வந்த சூழலில் சமண சமயம் போய்க் கொண்டு இருந்தது.

சிவபெருமானை எப்போதும் பிரியக்கூடாது என்ற காரணத்தால் தான் மங்கையர்க்கரசி தேவியார் கூன்பாண்டியனை மணம் செய்து கொள்கிறாள். அப்படி இருக்கையில் மக்கள் மாறினால் மன்னன் திருத்தலாம். இங்கு மன்னனே மாறியிருக்கிற போது யார் திருத்த முடியும்?

அதனால் முதலில் மன்னனை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள் மங்கையர்க்கரசி. இதற்காக இறைவனை வேண்டி உருகி கடைசியில் ஞானசம்பந்தர் மூலமாக செய்து இருக்கிறாள். திருநீறுக்கு என்ன பெருமை? அதை அணிவதன் சிறப்பு என்ன என பலமுறை மன்னருக்கு எடுத்துச் சொன்னார்.

இருந்தாலும் மன்னரால் உணர முடியவில்லை. இறைவன் அவருக்கு அப்போது சூலைநோய் தந்து அவரை ஆட்கொள்கிறார். ஞானசம்பந்தர் அங்கு தங்கியிருக்கிறார்.

இந்தக் குழந்தை போற இடத்துல எல்லாம் சமணர்களைத் துரத்திவிட்டு சைவத்தை நிலைநிறுத்துகிறது என்று மன்னரிடம் முறையிட்டனர். கூடவே அவர் தங்கியிருக்கிற மடத்துக்கு நெருப்பு வைக்கலாம் என்றும் ஆலோசனை சொல்கின்றனர். மன்னரும் அதற்கு சரி என்று ஒத்துக்கொள்கிறார்.

நெருப்பு வைக்கிறார்கள். பற்றி எரிகிறது. அங்குள்ள அடியார்கள் ஞானசம்பந்தரிடம் சொல்கின்றனர். ஏன் எல்லாரும் பதறாதீங்க…அமைதியா இருங்க. தீச்சுடர் நம் எம்பெருமானுக்கு உரியது. இதை வைத்து தான் ஆனந்த நடனம் செய்கிறார். அவரிடத்தில் உள்ள அக்னி நம்மை ஒன்றும் செய்யாது. இருங்க என்கிறார்.

அப்போது அந்த நெருப்புச்சுடரைப் பார்த்து ஞானசம்பந்தர் சொல்கிறார். பையவே சென்று பாண்டியருக்கு ஆகுக….என்று.

soolai noi pandiya mannan
soolai noi pandiya mannan

இது மதுரை பாஷை. பைய என்றால் மெதுவாக என்று பொருள். அது போய் அது நோயாக மாறி பாண்டியனுக்கு வேதனை தர சமணர்கள் எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் பலனில்லாமல் போனது. கடைசியில் ஞானசம்பந்தர் எழுந்தருளி திருநீற்றின் பெருமையை நிலைநாட்டுகிறார். மடப்பள்ளியில் இருந்து சாம்பலைக் கொண்டு வந்து பாண்டியமன்னனின் உடல் முழுவதும் பூசி சூலை நோயைத் தீர்க்கிறார். மந்திரமாவது நீறு என்ற திருநீற்றுப்பதிகம் அங்கு தான் உருவானது.

இந்த அற்புதமான செயலைச் செய்யக் காரணமாக அமைந்தவர் மங்கையர்க்கரசியார். அதுவரை மன்னனுக்கு கூன் விழுந்து இருந்ததால் அவரை கூன்பாண்டியன் என்றே அழைத்தனர். அவரது கூன் போக்கி நின்ற சீர் நெடுமாறனாக்கிய பெருமை மங்கையர்க்கரசியையேச் சேரும். தாழ்ந்து கொண்டிருந்த சைவத்தையும் நிலைநிறுத்தினார் அவர்.

சிவசின்னங்கள் அடையாளம் மட்டுமல்ல. ஆத்மார்த்தமாக அனுபவிக்க வேண்டும். அப்போது தான் அதன் பலனைப் பெற முடியும். சிவசின்னங்கள் அணிந்து இறைவனை நாடி வருவாயே…தோழி…நீ இப்படி தூங்கலாமா…எழுந்திரு என மாணிக்கவாசகர் நம்மையும் துயில் எழுப்புகிறார்.

ஆண்டாள் நாச்சியாரின் 7ம் பாடல் இது.

Thiruvembavai 7
Thiruvembavai 7

கீசு கீசு என்று தொடங்குகிறது.

இந்தப்பாடலில் கீசு என்பது பறவைகளின் ஒலி. காலை நேரத்தில் ஆயர்குல பெண்கள் தயிர் கடைகிறாங்க. அப்போது அந்த சத்தம் கேட்கிறது. அந்தக் கழுத்தில் அணிந்துள்ள அணிகலன்களின் சத்தம் கேட்கிறது. காலைப்பொழுதில் ஆயர்பாடி சுறுசுறுப்பாக இயங்குகிறது. இந்த சத்தம் உனக்குக் கேட்கவில்iலா…இப்படி தூங்குகிறாயே என ஆண்டாள் எழுப்புகிறாள்.

காலை வேளையில் ஆயர்குலத்தினர் வேலை சுறுசுறுப்பாக நடப்பதுண்டு. பால், மோர், தயிர் விற்பது…தயிர் கடைவது என்று.

கிருஷ்ணர் வெண்ணை திருடி தின்பார் என்பது நமக்குத் தெரியும். பாலைக் காய்ச்சுகிறோம். அதில் இருந்து தண்ணீர் வற்றுகிறது. அந்தப் பாலை இளம் சூட்டில் உறை விடணும். உறியில் வைத்து விடியற்காலை கடைந்தால் வெண்ணை வரும். அதே போல இளம் வயதில் இறைவன் என்ற மந்திரம் இட்டு, வைராக்கியம் என்ற உறியில் இருந்து பக்தி என்ற மத்தையும், ஞானம் என்ற கயிறையும் கொண்டு கடைந்தால் இறைவன் நமக்கு வெளிப்படுவார்.

அப்படி இறைவன் வெளிப்படும் தோற்றமே வெண்ணை. பக்தியில் விளைந்த அருட்பிராசதமாகிய வெண்ணையாகத் தான் கோபியர்களுக்கு அருள்புரிகிறார் இறைவன். பக்தியில் உள்ளவர்களுக்கு ஆன்மாவோடு ஒட்டி விடுவார் இறைவன். கண்ணன் வெண்ணையைத் திருடியதைக் கூட கோபியர்கள் ஆனந்தமாகக் கொண்டாடினர்.

உயிர்களிடத்தில் இருக்கக்கூடிய தீமையைக் களையும்போது, நன்மையை செய்யும்போதும் யாருக்கும் தெரிவதில்லை. அதை இறைவன் செய்து கொண்டுள்ளார். இந்தப்பாடலிலும் காலை நேரத்தில் வெண்ணை செய்யும் போது கடைகிறாங்க அல்லவா அப்படி கடையும்போது மத்தின் ஓசை கூடவா உனக்குக் கேட்கல….இன்னும் தூங்குகிறாயே…எழுந்திரு என்கிறார் ஆண்டாள்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.