ஓட்டு போட்டவர்களுக்கு தோசை, ஸ்வீட், ஜூஸ் இலவசம்; பெங்களூரு உணவகம் அசத்தல் அறிவிப்பு!

மை வைத்த விரல்களுடன் வந்தவர்களுக்கு இலவசமாக தோசை, இனிப்பு, பழச்சாறு வழங்கி அசத்தி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், பெங்களூர் நகரில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் தனியார் உணவகம் ஒன்று வாக்களித்த பின் விரல்களில் வைத்த மை.யுடன் வரும் அனைவருக்கும் இலவசமாக தோசை, மைசூர் பாக் மற்றும் பழச்சாறு வழங்கி வருவது கவனம் பெற்றுள்ளது…

கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6:00 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் பெங்களூர் நகரில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் ஒய்எம்சிஏ மைதானம் அருகே இயங்கி வரும் தனியார் உணவகம் ஒன்று புது முயற்சியை மேற்கொண்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் வாக்களித்த அனைவருக்கும் இலவசமாக தோசை இனிப்பு பழச்சாறு வழங்குவதாக அறிவித்து காலை முதல் வழங்கி வருகிறது. ஏற்கனவே இது குறித்த அறிவிப்பை உணவகம் வெளியிட்டிருந்தது. ஆனால் இதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி அதிகாரிகள் தடை விதித்திருந்தனர். இதனை எதிர்த்து உணவக உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தனியார் உணவகத்தின் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றனர். வாக்களித்த பிறகு வாக்காளர்களுக்கு உணவு வழங்குவதில் விதிமுறை மீறல் இல்லை என இவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று வாக்களித்த பிறகு ஏராளமானோர் தங்களது கைகளில் வைத்த மையை காண்பித்து டோக்கன் பெற்று இலவசமாக தோசை இனிப்பு பழச்சாறு பெற்று சென்றனர். மாநில அளவில் கர்நாடக அளவில் பதிவாகும் வாக்கு சதவீதத்தை விட கடந்த தேர்தல்களில் பெங்களூர் நகர் பகுதியில் குறைவான அளவில் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. கடந்த 2018 தேர்தலில் கர்நாடகாவில் 72.13 சதவிகிதம் அளவிற்கு வாக்குகள் பதிவானாலும் பெங்களூர் நகரில் 57 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகி இருந்தன. பெங்களூர் நகர் பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது போன்று இலவச அறிவிப்பை வெளியிட்டு, வழங்குவதாக உணவக உரிமையாளர் கிருஷ்ணராஜ் தெரிவித்தார்.

பெங்களூரில் உள்ள பல்வேறு தொகுதிகளில் வாக்களித்த பலரும் ஆர்வத்துடன் வந்து உணவை உண்டு மகிழ்ந்தனர். உணவகத்தின் இந்த முயற்சிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.