செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருக்கக்கூடிய 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தும் நடைமுறையானது அமலில் இருந்து வருகிறது.
அதன் படி, நடப்பாண்டில் ஏப்ரல் 1-ம் தேதி மற்றும் செப்டம்பர் 1-ம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கார்,வேன்,ஜீப்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 105 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி சமயபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, கரூர், மணவாசி ஆகிய சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
அதே போல் வேலஞ்செட்டியூர், தஞ்சை, வாழவந்தான் கோட்டை ஆகிய சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. மேலும், தமிழகத்தில் ஏற்கனவே 50 இடங்களில் ஏப்ரல் 22-ம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.