கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஹிமாச்சல பிரதேசத்தில் வரும் 28ம் தேதி கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு, பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த சூழலில் நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு ஹாமிர்புர் மாவட்டத்தில் வெள்ளத்தில் தத்தளித்த 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாகவும், பல்வேறு மாவட்டங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஜோகிந்தர் நகர் – பதான்கோட் மார்க்கத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்குர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதோடு பல்வேறு மாவட்டங்களில் மீட்புப் பணிகளை வேகப்படுத்தும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.