சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருவதையடுத்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வங்கக்கடலில் தோன்றிய புயல் இன்று இரவு மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் தொடங்கிய மழை அதன்பிறகு கனமழையாக மாறி விடிய விடிய பெய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் உள்ள பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பால் உட்பட அத்தியாவசியப் பொருட்களை வாங்கக் கூட இன்று காலை வீட்டை விட்டு பொது மக்கள் வெளியேற முடியாத சூழல் இருப்பதாகவும் பெரும்பாலான கடைகள் திறக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்பதால் ஊழியர்கள் இன்று வேலைக்கு செல்வது எப்படி என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
இந்த நிலையில் புயல் கரையை கடக்கும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் புயலால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்களை உடனடியாக மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று இரவு புயல் கரையை கடந்த உடன் படிப்படியாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.