தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த மாதம் வரை நீடித்த அதிக குளிர் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இந்த முறை கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலை இதனால் தீவிரமாக அதிகரிக்கும் என்று தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கவில்லை. முக்கியமாக கடந்த இரண்டு நாட்களாக வெப்ப காற்றும் வடமாநிலங்களில் வீசி வருகிறது
குறிப்பாக நேற்று தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரி வரை பதிவானது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், குழந்தைகள், வயதானோர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குள்ளே இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றும், வெயிலில் செல்ல வேண்டியிருந்தால் குடை, உடலை முழுதாய் மறைக்கும் பருத்தி ஆடைகள் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு ஆகியவை தினசரி பதிவேற்றம் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.