ஆதார் அட்டையுடன் பான் அட்டையை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்காவிடில் ரூ.1000 அபராதமாக விதிக்கப்படும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருமான வரி விதிகளின்படி, மார்ச் 31, 2022க்குள் பான் மற்றும் ஆதாரை இணைக்கவில்லை என்றால், அபராதமாக ரூ.1000 செலுத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 234H இன் படி, வருமான வரித் துறைக்கு தனிநபர் தனது ஆதார் விவரங்களை தெரிவிக்கத் தவறினால், அதற்கு அபராதமாக ரூ. 1000 செலுத்த வேண்டும். பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 என்றும், ஏப்ரல் 1ம் தேதி முதல் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
பான் கார்டை ஆதாருடன் இணைக்காததற்கு ஏதேனும் அபராதம் விதிக்க அரசு முன்மொழிகிறதா என்ற கேள்விக்கு, நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “நிதிச் சட்டம், 2021 வருமான வரியில் 234H என்ற புதிய பிரிவைச் சேர்த்துள்ளது. அதன்படி பான்-ஆதார் இணைக்கும் செயல்முறையை முடிக்க சட்டம், 1961. பிரிவு 139AA இன் உட்பிரிவு (2) இன் கீழ் தனது ஆதாரை தெரிவிக்க வேண்டிய ஒரு நபர், ஒரு குறிப்பிட்ட தேதியில் அல்லது அதற்கு முன் அவ்வாறு செய்யத் தவறினால், அவர் ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணங்களுக்காக பலமுறை மத்திய அரசு ஆதார் எண்ணையும், பான் கார்டையும் இணைக்கும் நடைமுறைக்கு கால அவகாசம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.