அடிமைப் பெண் முதல் அண்ணாத்த வரை மறக்க முடியாத பாடும் நிலா.. பாடகர் SP. பாலசுப்பிரமணியம் பிறந்த தினம்..

இந்தியத் திரையுலகில் பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடி கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை வென்ற பாடகர் எஸ்பி. பாலசுப்பிரமணியம்.

spb

1964 ஆம் ஆண்டு நடந்த ஒரு பாட்டு போட்டியில் பாடல் பாடி வெற்றி பெற்று பரிசினை வென்று திரைத் துறையில் அடி எடுத்து வைத்தவர்.

தமிழில் இவரது முதல் பாடல் சாந்தி நிலையம் என்ற படத்தில் “இயற்கை என்னும் இளைய கன்னி” என்பதாகும் ஆனால் அந்த பாடல் வெளியாவதற்கு முன்பாகவே அடிமைப் பெண் படத்தில் இவர் பாடிய “ஆயிரம் நிலவே வா” என்ற பாடல் வெளியாகி இவரது முதல் பாடலாய் அமைந்தது.

அடிமைப்பெண் படத்தில் தொடங்கிய இவரது இசை வாழ்க்கை அவரது இறுதி மூச்சு வரை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

காலை கண் விழித்ததும் நாம் கேட்கும் பக்தி பாடல் தொடங்கி பேருந்து பயணத்தின் போது நாம் கேட்கும் பாடல்களிலும், இரவு கண் உறங்கும் முன்பு கேட்கும் பாடல்களிலும் இவருடைய குரல் நிச்சயம்‌ இருக்கும்.

இவர் குரலில் இருக்கும் வசீகரம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டது.

சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான முதல் தேசிய திரைப்பட விருத்தினை பெற்றவர். 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, 2011 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது, ஆறு தேசிய விருதுகள், பிலிம் பேர் விருது 1, தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது மூன்று முறை என பல்வேறு விருதுகளை வாங்கியவர்.

ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்றுள்ளார்.

தேசிய விருது நான்கு மொழிகளில் பெற்ற ஒரே திரைப்பட பின்னணி பாடகர் நம் எஸ்பிபி.

40,000 பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர்.

இத்தனை விருதுகள் பெற்றாலும் இத்தனை சாதனைகள் புரிந்தாலும் என்றும் எளிமையுடன் குழந்தைத் தன்மையுடன் குறும்புத்தனம் மாறாத சிரிப்புடனே வலம் வருவார்.

பாடகர் மட்டுமின்றி சிறந்த நடிகராக திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். பன்முகத் திறமை வாய்ந்த மனிதர் நம் எஸ்பிபி.

கச்சேரிகளில் தன்னுடன் பாடும் வளர்ந்து வரும் பாடகர்களுக்கு தயக்கமோ பயமோ இருக்கக் கூடாது என்று அவர்களுடன் சகஜமாய் பேசி அவர்களை சகஜ நிலையை கொண்டு வந்து விடுவார்.

பாட்டுப் போட்டிகளில் நடுவராய் வீற்றிருக்கும் பொழுது அங்கு பாடல் பாடும் குழந்தைகளுடன் சேர்ந்து தானும் ஒரு குழந்தையாகவே மாறிவிடுவார்.

2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றினால் உடல்நல குறைவு ஏற்பட்டு இறைவனடி சேர்ந்தார். இன்று இந்த மாபெரும் கலைஞன் பிறந்த தினம்.

அவர் மறைந்த போதும் அவரது பாடல்கள் என்றும் நம் நினைவில் வீற்றிருக்கும்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் எஸ்பிபி சார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...