காவியில்லா வள்ளுவர் படத்தை வணங்கும் கவர்னர்.. ஆனால் அண்ணாமலை..?

தெய்வப் புலவர் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலர் திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று வள்ளுவர் கோட்டம் சென்று அங்கு உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். அந்த வகையில் தமிழக கவர்னர் ரவி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். மேலும் அவர் வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவரின் படத்தை வணங்கியவாறு உள்ள புகைப்படம் ஆகி வருகிறது.

இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் தினம் குறித்த் கூறியிருப்பதாவது: பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் இருப்பவரும், தமிழர்கள் வாழும் புண்ணிய பூமியில் பிறந்தவரும் தர்மம், நீதி சாஸ்திரங்களை ஒருங்கே பெற்ற தனிச்சிறப்பு மிக்க திருக்குறளை வழங்கியவருமான திருவள்ளுவருக்கு அவரது தினத்தில் நெஞ்சார்ந்த மலர் மரியாதையை செலுத்தினார். திருக்குறள் பாரதிய கலாசாரத்தையும் நாகரிகத்தையும் வடிவமைத்து வளர்த்தது. அதன் ஆழமான போதனைகள், இன்று ஜி20 தலைவராக எழுச்சி பெறும் பாரதத்துக்கு மிகவும் பொருத்தமானவை.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில் திருவள்ளுவரின் புகைப்படத்தை பதிவு செய்து திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் பதிவு செய்த புகைப்படத்தில் திருவள்ளுவர் காவி உடையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: சிறப்புமிக்க இந்த திருவள்ளுவர் தினத்தில், வாழ்வியலை மையமாக வைத்து, மக்களுக்குத் தேவையானது, தேவையற்றதை தெளிவாகச் சொல்லும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுவோம். கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்.

கவர்னர் மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரும் வெவ்வேறு உடைகளை அணிந்த வள்ளுவரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்துவது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.