காலம் காலமாக பெண்கள் தான் வீடுகளில் சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற அனைத்து வீட்டு வேலைகளையும் செய்து வருகிறார்கள். வீட்டு வேலை என்றாலே அது பெண்கள் செய்யும் வேலை என்ற பிம்பம் உருவாகி விட்டது. ஆனால் அது அப்படி அல்ல ஆண்களும் செய்யலாம் என்பது பலருக்கு தற்போது வரை புரியவே இல்லை.

இந்நிலையில் இதை ஆண்களுக்கு உணர்த்தி பாலின சமத்துவத்தை நிலை நிறுத்தும் விதமாக அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. ஆனால் தமிழக அரசு அல்ல கேரள அரசு. ஆமாங்க சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, துவைப்பது, பெருக்குதல் என அனைத்து வீட்டு வேலைகளையும் செய்ய ஆண்களுக்கு பயிற்சியளிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாம்.
வீட்டு வேலை என்பது பெண்களுக்கான பணி மட்டுமல்ல, என்பதை உணர்த்தும் வகையில் பாலின சமத்துவத்தை வீட்டிலிருந்தே தொடங்கும் ஒரு புதிய முயற்சியாகவே கேரள அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்மார்ட் கிச்சன் திட்டத்தின் ஒருபகுதியாக அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இந்த புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
அதன்படி ஆண்களுக்கு வீட்டு வேலைகளை செய்வதற்கான செயல்முறை பயிற்சியை சமையல் கலை வல்லுநர்கள் மூலம், அரசு சேனலின் வழியாக வகுப்புகள் எடுக்க முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த திட்டத்தை கண்கானிக்க குழு ஒன்று செயல்படுவதுடன் முதற்கட்டமாக இதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
பாலின சமத்துவத்தை சோசியல் மீடியாவிலும், படங்கள் வாயிலாகவும் மட்டும் பேசாமல் அதிரடியாக ஒரு திட்டத்தை செயல்படுத்த முன்வந்த கேரள அரசின் இத்தகைய செயல் பாராட்டிற்குரியது. முதலில் பாலின சமத்துவம் என்பது வீடுகளில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும். இதை அனைத்து மாநில அரசும் பின்பற்றினால் நன்றாக இருக்குமே.