புதுச்சேரியில் தமிழக அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு!

புதுச்சேரியில் தமிழ்நாடு அரசு பேருந்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேருந்து கண்ணாடிகள் உடைந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

கடந்த சில நாட்களாகவே இந்துக்கள் குறித்து இழிவாக பேசியதாக நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசாவைக் கண்டித்து பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் ஆ.ராசாவை கண்டித்து நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. பாஜக, இந்து முன்னணி உள்ளிட்டவை சார்பில் பல்வேறு காவல்நிலையங்களிலும் ஆ.ராசா மீது புகாரளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டைத் தொடர்ந்து இன்று புதுச்சேரியில் ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. சரக்கு மற்றும் பொது போக்குவரத்து இயங்கவில்லை. இதன் காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனிடையே புதுச்சேரியில் இயக்கப்பட்ட இரண்டு தமிழ்நாடு அரசு பேருந்துகள் மீது வில்லியனூர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இரண்டு  தமிழ்நாடு அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment