திருமணத்தின் போது மகளுக்கு பெற்றோர் கொடுக்கும் பரிசுகளை வரதட்சிணையாக கருத முடியாது: கேரள உயர்நீதிமன்றம்

திருமணமாகி செல்லும் மணப் பெண்ணுக்கு திருமணத்தின் போது அவரது பெற்றோர் தரும் நகைகள் உள்ளிட்ட பரிசுகள் வரதட்சிணை என்ற வகையில் வராது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தனது மகளின் நலனுக்காக அவர்கள் கொடுக்கின்றனர். யாருடைய வற்புறுத்தலின் பேரில் கொடுக்கப்படவில்லை. இதுபோன்ற பரிசுகள் 1961ம் ஆண்டு இயற்றப்பட்ட வரதட்சிணை தடை சட்டத்தின் கீழ் வராது என்று கேரள உயர்நீதிமன்ற நீதிமன்றத்தின் தனி நீதிபதி தெரிவித்துள்ளார்.

திருமணத்தின் போது பரிசாக மணமகளுக்கு கொடுக்கப்பட்ட நகைகளை அவரது பெற்றோரிடம் திரும்ப கொடுக்க வேண்டும் என்ற கொல்லம் மாவட்ட வரதட்சிணை தடை அதிகாரியின் உத்தரவை எதிர்த்து தோடியூரைச் சேர்ந்தவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சட்டப்படி மணப் பெண்ணுக்கு அவரது பெற்றோர் அவர்களது விருப்பத்தின் பேரில் கொடுத்த தங்க நகைகளை வரதட்சிணையாக கருத முடியாது. இந்த விவகாரத்தில் கொல்லம் மாவட்ட வரதட்சிணை தடை சட்ட அதிகாரி தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்ற மனுதராரர் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம் ஆர் அனிதா, கொல்லம் மாவட்ட வரதட்சிணை தடுப்பு அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். அதிகாரி இவை வரதட்சிணையாக பெறபட்டது என்பதை சோதனையிட்டு உறுதி செய்யவில்லை. இது குறித்த அவரது உத்தரவு தெளிவாக இல்லை. எனவே வரதட்சிணையாக கருதி அவர் கொடுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி தெரிவித்தார்.

திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட 55 சவரன் நகைகளை திரும்ப கொடுக்க வேண்டும் என்று அந்த பெண் கேட்டிருந்தார். இந்த நகைகள் கூட்டுறவு சங்க வங்கியில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட நெக்லெஸ் மற்றும் வங்கியில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள நகைகளை மணப் பெண் வீட்டாரிடம் திரும்ப கொடுப்பதாக மனுதாரர் நீதிமன்றத்தில் விருப்பம் தெரிவித்து இருந்தார். இதற்கு அந்த பெண் இசைவு தெரிவித்தார். இதையடுத்து வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment