ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை, செவிலியருக்கு தங்க வளையல்; அப்பல்லோவில் நடந்தது என்ன? – சசிகலா பரபரப்பு பேட்டி!

இறக்கும் அன்று மாலையில் கூட ஜெயலலிதா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்: டிசம்பர் 19 ம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பலாம் என்று திட்டமிட்டு, செவிலியர்களுக்கு பரிசளிக்க வளையல்களை வாங்கி வைத்திருந்தார் என்றும் விகே சசிகலா அளித்துள்ள பேட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

வெளிநாட்டு சிகிச்சைக்கு மறுப்பு:

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின விழாவில் வி.கே.சசிகலா பங்கேற்று ஆதரவற்றோருக்கு புடவை, வேட்டி உள்ளிட்ட நலத்திட்டங்களையும், மதிய உணவாக மட்டன் பிரியாணியையும் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா; சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்து செல்லலாம என வெளிநாட்டு மருத்துவர்கள் கேட்டபோது அதை வேண்டாம் என்று ஜெயலலிதா மறுத்தார். அவரை வெளிநாடு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருந்தது. ஆனால் தமிழ்நாட்டிலேயே நல்ல மருத்துவம் கிடைப்பதாகவும், சிகிச்சையின்போது தனது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் ஜெயலலிதா கூறினார் .

செவிலியர்களுக்கு தங்க வளையல்:

இறக்கும் அன்று மாலையில் கூட அவர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். அனைத்து மருத்துவர்கள், செவிலியர்களுடன் நன்றாக பேசுவார் . டிசம்பர் 19ம் தேதி ஜெயலலிதாவை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று இருந்தோம். டிசம்பர் 15 ம் தேதி மருத்துவர்கள் , செவிலியர்களுக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறினர். செவிலியர்களுக்கு கொடுக்க வளையல் உள்ளிட்டவற்றையெல்லாம் ஜெயலலிதாவே தேர்வு செய்து வைத்திருந்தார். டிசம்பர் 15ம் தேதி அவற்றை ஒப்படைக்குமாறு ஆர்டர் கொடுத்திருந்த நகைக்கடை நிறுவனத்திடம் சொன்னார்.

ஜெயலலிதா இறந்தது எப்போது?

ஜெயலலிதா இறந்த தேதி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த வி.கே.சசிகலா, எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்போலோ தனியார் மருத்துவர்கள், தமிழ்நாடு அரசின் மருத்துவர்கள் என்று மூன்று தரப்பினர் நாள்தோறும் ஜெயலலிதா உடல் நிலை குறித்து அறிக்கை தந்தனர். அதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஜெயலலிதா இறந்த தேதி டிசம்பர் 5தான் இறந்தார் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.