ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவரா? ஜனவரி முதல் விலை உயர வாய்ப்பு!!

சோமட்டோ மற்றும் ஸ்விக்கி உள்ளிட்ட உணவு டெலிவிரி செய்யும் செயலிகளுக்கு மத்திய அரசு 5% வரி விதித்துள்ளது. இந்த வரிவிதிப்பானது ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி, உணவகங்கள் போன்று உள்ளீட்டு வரி சலுகைகள் உணவு டெலிவிரி செயலி நிறுவனங்களுக்கு கிடைக்காது. உணவு டெலிவிரி செயலியின் சேவைகளை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. செப்டம்பர் 17, 2021 அன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி இந்த புதிய முறை நாடு முழுவதும் ஜனவரி 1, 2022 முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

இந்த வரி விதிப்பானது நேரடியாக வாடிக்கையாளர்களை பாதிக்காது. ஏனெனில் இந்த வரியை உணவு டெலிவிரி செய்யும் நிறுவனங்களிடமிருந்து அரசு வசூலிக்கும். எனினும் உணவு டெலிவிரி செயலிகள் இந்தத் தொகையை ஏதேனும் ஒரு முறையில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஜனவரி 1, 2022 முதல் உணவு டெலிவிரி செயிலிகளில் செய்யப்படும் உணவு ஆர்டர்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது.

உணவு டெலிவிரி செயலிகள் மூலம் செய்யப்படும் ஆர்டர்களுக்கு இதுவரை உணவகங்கள் 5% வரி செலுத்த வேண்டியிருந்தது. தற்போது அது நீக்கப்பட்டு உணவு டெலிவிரி செயலிகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பானது ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத உணவகங்களில் இருந்து உணவை ஆர்டர் செய்யும் செயலிகளுக்கு பொருந்தும்.

இதனால், உணவு டெலிவிரி செயலிகள் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்ட உணவகங்களில் இருந்து உணவு ஆர்டர் எடுக்கவே வாய்ப்புள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment