அக்னி குஞ்சொன்று கண்டேன்….அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

நம் நாடு விடுதலை அடையவேண்டும் நாம் அனைவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று பாடுபட்ட தலைவர்களும் தியாகிகளும் பலர் உள்ளனர். நமக்கு தெரிந்தவர்கள் என்றால் தேசப்பிதா காந்தியடிகள், நேரு, பாலகங்காதர திலகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், ராணிமங்கம்மாள், ஜான்சிராணி இவர்கள் தான் என்று தெரியும்.

ஆனால் இந்த தியாகியைப் பற்றி நிறைய பேர் தெரிந்திருக்க மாட்டார்கள். இவரைப் பற்றி சொல்லும்போது அக்னி குஞ்சொன்று கண்டேன்….அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? என்ற மகாகவி பாரதியாரின் பாடல் தான் நம் நினைவுக்கு வருகிறது.

போர் புரிய வயது ஒரு பொருட்டல்ல. வீரமும் விவேகமும் நெஞ்சுரமும் சாமர்த்தியமும், தியாகமும் இருந்தால் போதும். ஒரு சிறு பொறி தான் பெரிய தீயாக மாறுகிறது. அந்தப் பொறி தான் இங்கு வெள்ளையரை குலைநடுங்க வைத்த குயிலி. இவரது வீர வரலாற்றை இப்போது பார்ப்போம்.

velu nachiyar
velu nachiyar

வேலுநாச்சியார் வெள்ளையனுக்கு எதிராக முதல் முதலாகக் குரல் கொடுத்த வீரப்பெண்மணி. இவர் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரின் மனைவி. ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி துயர் கொடுத்த வேளையில் முத்துவடுகநாதரை வெள்ளையர்கள் சதி செய்து அவரை சுட்டுக்கொன்றனர். அதன் பின் ஆயுதம் ஏந்தி வீரத்துடன் போராடியவர் தான் வேலுநாச்சியார்.

இங்கு நாம் பார்க்க இருக்கும் பெரும் தியாகி யார் என்றால் அவர் தான் குயிலி. இவர் ஆங்கிலேயருக்காக வேவு பார்த்த வெற்றிவேல் என்பவரை குத்திக் கொன்றார். அதனால் அவரை வேலுநாச்சியார் நம்பிக்கையுடன் தனது மெய்க்காப்பாளராக வைத்துக்கொண்டார். இவர் தான் மகளிரணியின் படைத்தளபதியாகவும் இருந்தார்.

kuyili 2
kuyili

18 வயதே நிரம்பிய இவர் சுதந்திர வேட்கையுடன் நாட்டின் விடுதலைக்காக கடுமையாக உழைத்தார். ஒருகட்டத்தில் ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரின் கோட்டையை சுற்றிவளைத்தனர். தப்பிக்க வழியில்லை. நாலாபுறமும் ஆங்கிலேயப்படைகள். என்னடா செய்வது என்று வேலுநாச்சியார் திகைத்து நிற்க அன்று இரவே தனது போர்ப்படைகளின் முக்கிய அங்கத்தினருடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

ஆங்கிலேயருக்கு எதிராக எப்படி போராடுவது? அவர்கள் நம்மைப் பிடிக்கும் முன் எப்படி அவர்களை விரட்டி அடித்து நிலைகுலைய வைப்பது என்பது போன்ற கேள்விகளை முன்வைத்து ஆலோசனை நடத்தினர். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த ஆலோசனைகளை முன்வைத்தனர். ஆனால் எவையும் வேலுநாச்சியாருக்குத் திருப்திதரவில்லை.

அப்போது வெள்ளையரின் கைவசம் உள்ள ஆயுதக்கிடங்கை அழித்தால் அவர்களின் படையை நிலைகுலையச் செய்துவிட முடியும் என்று வேலுநாச்சியாரின் படைத்தளபதி சொல்கிறார். உடனே அதுவும் சரிதான் என்று ஒப்புக்கொண்ட வேலுநாச்சியார் அதை எப்படி நாம் வெற்றிகரமாக செய்வது என்று கேட்கிறார்.

kuyili2
kuyili

அதற்கு அந்தப் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் ஆக வேண்டிய மற்ற வேலையைப் பாருங்கள் அரசியாரே என்று குயிலி சொல்கிறார். அதனால் மகளிர்அணி படைத்தளபதியே சொல்லிவிட்டாரே. அதுவும் தனது மெய்க்காப்பாளர் என்பதால் …சரி அவர் பொறுப்பில் விட்டுவிடலாம்.

எல்லோரும் ஒரே பதட்டமான சூழ்நிலையில் என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டு இருக்கின்றனர். ஆயுதக்கிடங்கை குயிலி எப்படி ஒரே ஆளாக நின்று அழிக்கப்போகிறார் என்று பதட்டமாக இருந்தனர். விடியற்காலையில் மகாராணி வேலுநாச்சியாருக்கு செய்தி பறந்தது. வெள்ளையரின் ஆயுதக்கிடங்கு அழிந்தது என்ற வெற்றிச் செய்தி தான் அது. அதே நேரம் அது எப்படி அழிக்கப்பட்டது என்ற சோகச்செய்தியும் வந்தது. குயிலி எப்போதும் தன் வீரத்தாலும் விவேகத்தாலும் வேலுநாச்சியாருக்குத் தொடர்ந்து வெற்றியை ஈட்டித் தந்தார்.

கடைசி போரில் சிவகங்கைக் கோட்டையை மீட்க வேண்டிய தருணம். அப்போது வேலுநாச்சியார் வெள்ளையரை எதிர்த்து கடுமையாகப் போராடினார். அப்போது வெள்ளையர்கள் சிவகங்கை கோட்டையில் தான் ஆயுதக்கிடங்கை வைத்திருந்தனர். அதைக்கைப்பற்றுவதற்காக எத்தனையோ வியூகங்களை செய்து பார்த்தார் வேலுநாச்சியார். இறுதியில் குயிலி செய்த வியூகம் தான் போரை வெற்றிவாகைக்கு அழைத்துச்சென்றது.

குயிலி தன் உடல் முழுவதும் எண்ணையைப் பூசியபடி ஆயுதக்கிடங்கின் நடுவில் இருந்து தன் உடலில் நெருப்பை வைத்து வெடிக்கச் செய்தார் என்பது தான் அந்த செய்தி. இதன்பிறகு வெள்ளையர்கள் திகைத்துநிற்க வேலுநாச்சியாரின் படை வெற்றிகண்டது. இவரை ஒரு கற்பனை பாத்திரம் என்றும் சொல்கின்றனர். தாய்நாட்டிற்காக தன் இன்னுயிரையும் ஈந்த முதல் தற்கொலைப் படை பெண் இவர் தான். உலகின் முதல் தற்கொலைப் பெண் போராளியும் இவர் தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.