Connect with us

இதுவே முதன் முறை… திருநங்கைகளுக்கு காவல்துறை கொடுத்த அங்கீகாரம்!

Transgender

தமிழகம்

இதுவே முதன் முறை… திருநங்கைகளுக்கு காவல்துறை கொடுத்த அங்கீகாரம்!

இதுவே முதன் முறை… திருநங்கைகளுக்கு காவல்துறை கொடுத்த அங்கீகாரம்!

திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழிலாளிகளாகவும், ரயிலில் பிச்சையெடுத்து பிழைப்பு நடத்துபவர்கள் என்ற வழக்கமான கண்ணோட்டத்தை மாற்ற தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் திருநங்கைகளும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்கு கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தி முன்னேறி வருகின்றனர். மருத்துவம், நடனம், கலை, சுயதொழில் என திருநங்கைகள் அடுத்தடுத்து கால் பதித்துவந்த நிலையில், தற்போது ஊர்காவல் படையிலும் பணியில் சேர்ந்துள்ளனர்.

கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் 3 திருநங்கைகள் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில், மாவட்ட ஊர்க்காவல் படையினர் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் 380-க்கும் மேற்பட்டோர் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த திருநங்கைகளான சிறுமுகையைச் சேர்ந்த வருணாஸ்ரீ, தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த மஞ்சு, போத்தனூரைச் சேர்ந்த சுசித்ரா பன்னீர்செல்வம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மேற்கண்ட மூவருக்கும் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் முறை, பாதுகாப்புப பணியில் ஈடுபடும் முறை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகியவை குறித்து கடந்த இரண்டு வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டன. இப்பயிற்சியைத் தொடர்ந்து, இவர்கள் மாவட்ட ஊர்க்காவல் படையில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வருணாஸ்ரீ, மஞ்சு ஆகியோர் 12ம் வகுப்பும், சுசித்ரா 10ம் வகுப்பும் படித்துள்ளார். மூவருமே தங்களது குடும்பத்தினாரால் ஒதுக்கப்பட்ட போதும் தவறான வழியில் செல்லாமல் கிடைத்த வேலையை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். வருணாஸ்ரீ காவல ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்துள்ளார். மஞ்சு ஊர்காவல் படையில் சேர்வதற்கு முன்பு டெய்லரிங் தொழில் செய்து சம்பாதித்து வந்துள்ளார். சுசித்ரா பன்னீர்செல்வம் ஆன்லைன் ரேடியோவில் ஆர்.ஜேவாக பணியாற்றிக் கொண்டு, வாடகைக் காரும் ஓட்டி வந்துள்ளார்.

திருநங்கைகள் என்றாலே இப்படித்தான் என்ற தவறான கண்ணோட்டத்தை மாற்றியுள்ள மூவரும், அவர்களது சமூகத்திற்கு மற்றொரு உந்துதலாக அமைந்துள்ளனர். கோவையில் மாவட்ட ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்க்கப்பட்டது பொதுமக்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top