குடிபோதையில் 61 வயது பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த 61 வயது டேவிட் ஆலன் பர்க் என்பவர் விமானத்தில் ஏறும் முன்னர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அதன் பின் விமானத்தில் அவர் விமான பணிப்பெண்ணிடம் வலுக்கட்டாயமாக அதிக அளவில் மதுவை வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் குடிபோதையில் அவர் உளறிக் கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் விமான பணிப் பெண்ணை அழைத்து தனக்கு முத்தம் கொடுக்குமாறு கூறியுள்ளார். விமான பணிப்பெண் அதற்கு மறுத்த நிலையில் திடீரென அவர் கழுத்தை பிடித்து முத்தமிட்டதாக தெரிகிறது. இதனால் மிகவும் அசெளகரிகமாக உணர்ந்த அந்த பணிப்பெண் விமான கேப்டன் இடம் புகார் அளித்தார். விமான கேப்டன் இதுகுறித்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இந்த நிலையில் இன்னொரு விமான பணிப்பெண் கேப்டனுக்கு உணவை எடுத்துக் கொண்டிருந்தபோது அவரது உணவை குடிபோதையில் இருந்த டேவிட் ஆலன் பர்க் தட்டி விட்டதாகவும் தெரிகிறது. மேலும் தனது சக பயணிகளுக்கும் அவர் தொந்தரவு கொடுத்து வந்த நிலையில் விமானம் தரையிறங்கியதும் கைது செய்யப்பட்டார்.
போலீசார் அவரை கைது செய்த போது தான் குடிபோதையில் இல்லை என்றும் யாரையும் முத்தமிடவில்லை என்றும் அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். ஆனால் விமானத்தில் ஏறுவதற்கு முன் மது அருந்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் விமானங்களில் முத்தம் கொடுப்பது, சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் ஆண்டுக்கான அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் 5,973 விரும்பத்தகாத சம்பவங்கள், 2022ஆம் ஆண்டு 2,455 விரும்பத்தகாத சம்பவங்கள் விமானத்தில் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.