இன்றைய நூற்றாண்டில் டெக்னாலஜி அதாவது தொழில் நுட்பம் அதிக அளவில் வளர்ந்து விட்டதால் அனைத்து பணிகளுக்கும் இயந்திரங்கள் வந்து விட்டன. உதாரணத்திற்கு முன்பெல்லாம் உரல்களில் மாவாட்டிய நிலை மாறி தற்போது கிரைண்டர் வந்து விட்டது. அதேபோல் கைகளால் துணி துவைக்கும் நிலைமாறி வாஷிங் மிஷின் வந்து விட்டது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் மிகவும் அட்வான்ஸாக டெக்னாலஜி வளர்ந்து கொண்டே செல்கிறது. அட ஆமாங்க நம்ம வேலைய சுலபமாக்க தான் மிஷின்களை கண்டுபிடிச்சோம். ஆனா அந்த வேலைய செய்றதுக்காக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம் தான் ரோபோட்ஸ்.
இப்போ எங்க பார்த்தாலும் ரோபோட்ஸ் தான். வீட்டு வேலை செய்வதற்கு, கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் என எங்கு பார்த்தாலும் ரோபோட்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. இப்போ ஹோட்டல்களிலும் மனிதர்களுக்கு பதில் ரோபோட்களை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.
அதன்படி ஆந்திர மாநிலம் திருப்பதி பைபாஸ் சாலையில் உள்ள ரோபோ டின்னர் என்ற உணவகத்தை கடந்த 8ஆம் தேதி அன்று அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி திறந்து வைத்தார். இங்கு உணவு ஆர்டர் செய்தால் பெண் ரோபோக்கள் உணவை பரிமாறுகின்றன.
இதுகுறித்து பேசிய ரோபோ டின்னர் உணவகத்தின் மேலாளர் பாரத்குமார் ரெட்டி , “எங்கள் உணவகத்தில் ரோபோக்கள் மூலம் மட்டுமே உணவு பரிமாற்றம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த படி டேப் மூலம் உணவை ஆர்டர் செய்த சில நிமிடங்களில் ரோபோக்கள் உணவைக் கொண்டுவந்து பரிமாறுகின்றன. உணவு பரிமாறுவதற்கு என்று 12 ரோபோக்கள் உள்ளன.
இதற்கான செலவு சற்று அதிகம் தான் இருந்தாலும் உணவு விரும்பியவர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் வண்ணமாக இந்த ஏற்பாடு செய்துள்ளோம். இதனால் இங்கு நாளுக்கு நாள் அதிக வாடிக்கையாளர்கள் வருகின்றனர்” என கூறியுள்ளார்.
வாடிக்கையாளர்களை கவர இந்த யுக்தியை பயன்படுத்தியது நல்ல விஷயம் தான். ஆனால் இப்படி மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் ரோபோக்கள் செய்து விட்டால் மனிதர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்பது தான் ஒருபுறம் மிகப்பெரிய கவலையை அளிக்கிறது.