புழல் மகளிர் சிறையில் வெளிநாட்டுப் பெண் கைதிகளிடையே ஏற்பட்ட தகராறை தடுக்க சென்றபோது கைதிகள் தாக்கியதில் பெண் சிறை வார்டன் காயம் அடைந்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சென்னை புழல் மகளிர் சிறையில் சுமார் 150க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் வெளிநாட்டு பெண் கைதிகளும் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மகளிர் சிறையில் உள்ள கைதிகளுக்கு சமையலறையில் உணவு வழங்கிக் கொண்டிருந்தபோது இலங்கையைச் சேர்ந்த விசாரணை கைதி மேரி பிரான்சிஸ்கோ என்பவருக்கும் தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த சினோ தாண்டா மாம்பிசோ என்பவருக்கும் உணவு வாங்குவதில் வரிசையில் நிற்பதில் பிரச்சனை ஏற்பட்டது.
அப்பொழுது சினோ தான்டாவும் அவரது தோழி நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அண்யணி மோனிகாவும் சேர்ந்துகொண்டு மேரி பிரான்சிஸ்கோவை தாக்கினர். அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சிறிது நேரத்தில் மேரி பிரான்சிஸ்கோ அடைக்கப்பட்ட சிறை கதவை இருவரும் காலால் எட்டி உதைத்தனர். அப்போது பணியில் இருந்த முதல் நிலைக் காவலரான சிறை வார்டன் கோமளா வெளிநாட்டு கைதிகளை தடுத்து நிறுத்திய போது காவலரை கையால் தாக்கி கீழே தள்ளி விட்டதில் கீழே விழுந்த கோமளா மயக்கம் அடைந்தார். ஏற்கனவே இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்ட நிலையில் கோமளாவை அருகில் இருந்த பெண் காவலர்கள் மீட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் தம்மை தாக்கியதாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறி புழல் காவல் நிலையத்தில் பெண் வார்டன் கோமளா புகாரிளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வெளிநாட்டு கைதிகளிடையே ஏற்பட்ட தகராறை தடுக்க சென்று தாக்கியதில் பென் சிறை காவலர் காயமடைந்த சம்பவத்தால் மகளிர் சிறையில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.