தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள 50 சதவீத இடங்களுக்கு அரசு கட்டணத்திற்கு இணையான கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டணங்களில் விதிகளை மாற்றி தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் 50 சதவீத மருத்துவ இடங்களுக்கு மாநில அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு இணையான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என்றும், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் அந்த கட்டண சலுகை மற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் கேபிடேஷன் கட்டணம் வசூலிக்க அனுமதி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள தேசிய மருத்துவ ஆணையம், கல்வி லாபத்திற்கானது அல்ல என்ற கொள்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
கல்லூரி நடத்துவதற்கான செலவை கல்வி கட்டணத்தில் சேர்க்கலாம் என்றும், அதற்காக அளவுக்கு அதிகமான செலவுத்தொகையை சேர்க்க கூடாது என்றும் தேசிய மருத்துவ ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.